×

காமன்வெல்த் சபாநாயகர் மாநாட்டில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்திய தேசிய கொடியுடன் சென்றது வேதனை: தமிழக சபாநாயகர் அப்பாவு பேட்டி

மீனம்பாக்கம்: காமன்வெல்த் சபாநாயகர் மாநாட்டில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்திய தேசியக்கொடியுடன் மக்களவை சபாநாயகர் தலைமையில் நாங்கள் அனைவரும் கைகளில் ஏந்தி சென்றது வேதனை அளிக்கிறது என இன்று காலை சென்னை விமானநிலையத்தில் தமிழக சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்தார். கனடா நாட்டின் ஹாலிஃபேக்ஸ் நகரில் கடந்த மாதம் 65வது காமன்வெல்த் பாராளுமன்ற சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில், இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு உள்பட பல்வேறு மாநில சபாநாயகர்கள் கலந்து கொண்டனர். மாநாடு முடிந்து விமானம் மூலமாக துபாய் வழியாக இன்று காலை சென்னை விமானநிலையத்துக்கு சபாநாயகர் அப்பாவு வந்து சேர்ந்தார். விமானநிலையத்தில் நிருபர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: கனடாவில் நடைபெற்ற 65வது காமன்வெல்த் பாராளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் பங்கேற்றோம்.

இதில் என்னை தமிழக முதல்வர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தது மிகுந்த மகிழ்ச்சி. இம்மாநாட்டில், பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள், அவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து பல்வேறு நாடுகளின் சபாநாயகர்களுடன் விவாதிக்கப்பட்டது. இதற்கு முன்பாகவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதும், முதல் வரவு-செலவு திட்டத்தை காகிதம் இல்லாத சட்டப்பேரவை நிகழ்வாக நடத்தப்பட்டது. தற்போது சட்டமன்றம் துவங்கிய 1921 முதல் நூற்றாண்டு சட்டமன்ற நிகழ்வுகளை இணையத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

விரைவில் நூறாண்டு கால சட்டமன்ற நிகழ்வுகளை இணையத்தில் கண்டு ரசிக்க முடியும். கனடாவில் நடைபெற்ற சபாநாயகர்கள் மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட தேசியக்கொடி, இந்திய ஒன்றிய அரசின் அனுமதியோடு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது எல்லையில் ஏற்பட்ட பதட்டத்தில் கொல்லப்பட்ட 20 இந்திய வீரர்களது கல்லறையின் ஈரம் காய்வதற்குள், சீனாவில் இருந்து இந்திய தேசியக்கொடிகளை இறக்குமதி செய்து, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உள்பட நாங்கள் அனைவரும் அவற்றை ஏந்தி சென்றது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு சிரித்தபடி சென்றுவிட்டார்.

இந்திய பெருங்கடல் இதுவரை அமைதியாகத்தான் இருந்தது. அங்கு எப்போது சீன உளவுக் கப்பல் வந்ததோ, அன்று முதல் இந்திய எல்லை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அவருக்கு சட்டமன்ற அதிகாரிகள் உள்பட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.


Tags : Commonwealth Speaker's Conference ,China ,Tamil Nadu ,Papu , Anguish at Commonwealth Speaker's Conference with Indian national flag imported from China: Tamil Nadu Speaker Appavu interview
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்