முறையாக பார்க்கிங் வசதி செய்து தராததால் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் தினமும் திருடுபோகும் பைக்குகள்: ரயில்வே துறை அலட்சியத்தால் வீதியில் நிறுத்தும் பொதுமக்கள்

பெரம்பூர்: பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் முறையாக பார்க்கிங் வசதி செய்து தராததால் தினமும் பைக்குகள் திருடுபோகிறது. மேலும் ரயில்வே துறை அலட்சியத்தால் பைக்குகளை நடைபாதை மற்றும் வீதியில் பொதுமக்கள் நிறுத்தும் அவலநிலை உள்ளது. நாட்டின் மிகப்பெரிய துறைகளில் ரயில்வே துறையும் ஒன்று. ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்குவதாக கூறி அதனை தனியார் மயமாக்கும் பணிகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. ரயில்வே துறைக்கு லாபமிட்டும் பல்வேறு வழிகளை முறையாக அவர்கள் பயன்படுத்தாத காரணத்தினால் ரயில்வே துறைக்கு வரவேண்டிய பணம் சில தனியார் அமைப்புகளுக்கும் ரவுடிகளுக்கும் சென்று சேர்கிறது.

அந்த வகையில் ஒவ்வொரு ரயில்வே நிறுத்தத்திற்கும் வெளியே வாகன நிறுத்துமிடம் ஒன்று இருக்கும். ரயில்வே துறைக்கு சொந்தமான அந்த இடத்தை தனியார் நபர்கள் டெண்டர் மூலம் எடுத்து அந்த இடத்தை பராமரித்து இருசக்கர வாகனங்களை நிறுத்தி அதற்கு என்று அனுமதிக்கப்பட்ட தொகையினை வசூல் செய்து வருகின்றனர். அவ்வாறு டெண்டர் விடப்பட்ட இடத்தில் விடப்படும் இருசக்கர வாகனங்கள் பாதுகாப்பாக இருப்பதால் பொதுமக்கள் ஆண்டு சந்தா மாத சந்தா என தினசரி கட்டணம் என டோக்கன்களை பெற்று தங்களது இரு சக்கர வாகனங்களை அந்த இடத்தில் விட்டு ரயில் மூலம் பயணம் செய்து வருகின்றனர்.

மீண்டும் இரவு தங்களது இருசக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். இவ்வாறு ரயிலில் பயணம் செய்யும் நபர்கள் தினமும் ரயில்வே துறைக்கு சொந்தமான இருசக்கர பார்க்கிங்கை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் ரயில்வே துறைக்கும் கணிசமான வருமானம் வருகிறது. சென்னையில் முக்கியமான ரயில் நிலையங்களுக்கு வெளியே இருக்கும் பார்க்கிங் இடங்கள் மிகவும் பரபரப்பாக இருக்கும். குறிப்பாக சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் அதிகப்படியான வண்டிகள் நிறுத்துவார்கள். புறநகர் பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அதற்கு ஏற்றார்போல் ரயில்வே துறையின் டெண்டரும் இருக்கும்.

இவ்வாறு ரயிலில் பயணம் செய்யும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை ரயில்வே பார்க்கிங்கில் விட்டு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு முறையாக ரயில்வே பார்க்கிங் செய்து கொடுக்க வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் கடமையாகும். சென்னையில் ஓரளவிற்கு மையப்பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையம் பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் புளியந்தோப்பு, ஓட்டேரி, வியாசர்பாடி, கொடுங்கையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் ரயில் மூலம் வேலைக்கு செல்வதாக இருந்தால் பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் சென்று அங்கு தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு ரயிலில் செல்வது வழக்கம்.

மீண்டும் இரவு தங்களது இரு சக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்வார்கள். இவ்வாறு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 500 இருசக்கர வாகனங்களாவது அந்த பகுதியில் பார்க்க முடியும். கடந்த 4 மாதங்களாக இருசக்கர வாகனங்களை நிறுத்தும் இடத்தில் வெறும் 30 இருசக்கர வாகனங்கள் மட்டுமே நிற்கின்றன. மற்ற அனைத்து வாகனங்களும் ரயில்வே நிலையத்திற்கு உள்ளே செல்லும் நடைபாதைகளிலும், பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்திற்க்கு வெளிப்புறத்திலும் விடப்படுகின்றன. உள்ளே உள்ள பார்க்கிங் பகுதிக்கு ரயில்வே நிர்வாகத்தால் டெண்டர் விடப்படவில்லையா அல்லது டெண்டர் விட்டும் குறிப்பிட்ட அந்த நபர்கள் இன்னும் தங்களது வேலையை ஆரம்பிக்கவில்லை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்த நிலைமை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் நீடித்து வருகிறது. இதனால் ரயில்வே போலீசார் மற்றும் ஆண்டு சந்தா கட்டிய சுமார் 30 பேர் மட்டுமே ரயில் நிலைய பார்க்கிங்கில் தங்களது வாகனங்களை விட்டு செல்கின்றனர்.

மற்றவர்கள் அனைவரும் வெளியே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். மீண்டும் இரவு வந்து வாகனங்களை எடுக்கும்போது சில வாகனங்களில் பெட்ரோல் திருடுபோவதாகவும், வாகனங்களில் உள்ள உதிரிபாகங்கள் திருடுபோவதாகவும் வாகன உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் கடந்த 4 மாதத்தில் மட்டும் 48 வண்டிகள் திருடுபோயுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை ரயில்வே நிர்வாகத்தால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியில் வாகனங்களை நிறுத்தும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில்  ரயில்வே நிர்வாகம் முறையாக பார்க்கிங் வசதி செய்து கொடுத்து இருசக்கர  வாகனங்களை ரயில்வே பார்க்கிங்கில் விடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என  இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெட்ரோலும் திருட்டு

இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு உள்ளே இடமிருந்தும் முறையாக டெண்டர் விட்டு அதனை சரிவர ரயில்வே நிர்வாகத்தினர் பராமரிக்காத காரணத்தினால் அடிக்கடி வாகன திருட்டுகள் நடக்கிறது. தினமும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் வெளியே நிறுத்தப்படும் இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை திருடி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அலுவலகத்திற்கு சென்று வீட்டிற்கு செல்லலாம் என நினைத்து வீட்டிற்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் வழியில் பெட்ரோல் இல்லாமல் தங்களது இருசக்கர வாகனங்களை தள்ளிக்கொண்டு செல்லும் நிலைமையும் ஏற்படுகிறது.

Related Stories: