சிட்லப்பாக்கத்தில் 16ம் ஆண்டு இலவச கண்காட்சியில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகள் : அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை, ராதாநகர், கிருஷ்ணமாச்சாரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்.  கட்டிட கலை நிபுணர்.  இவர் தீவிர விநாயகர் பக்தர்.  கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை சேகரித்து பொதுமக்களுக்கு இலவசமாக கண்காட்சி நடத்தி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக  கண்காட்சி நடைபெறாத நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 20,000 விநாயகர் சிலைகளுடன் கூடிய 16ம் ஆண்டு விநாயகர் கண்காட்சி சிட்லப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீலஷ்மிராம் கணேஷ் மகாலில் நடைபெற்றது.

இந்த கண்காட்சியை தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் ஸ்கூட்டர் ஓட்டும் விநாயகர், விநாயகரின் சயன திருக்கோலத்தில் பல்வேறு வடிவங்களில் 200 சிலைகள் இடம்பெற்றுள்ளன. 5 அடி உயர தங்க நிற யானையில் விநாயகர், சிவனுக்கு பூஜை செய்யும் சிலை, விநாயகர் அலங்கார சிலைகள், சந்தனத்தில் செய்யப்பட்ட திண்டு விநாயகர், கண்ணாடி மாளிகையில் விநாயகர், படகு ஓட்டும் விநாயகர், விநாயகர் திருக்கல்யாணம், செஸ், கிரிக்கெட், கேரம் விளையாடும் விநாயகர் சிலைகள், முருகன், பார்வதியுடன் பல்வேறு வாகனங்களில் செல்லும் விநாயகர் சிலைகள், வனத்தில் இருக்கும் விநாயகர் என பல்வேறு வகைகளில் 20,000 விநாயகர் சிலைகள், விநாயகரின் அபூர்வ புகைபடங்கள், வெளிநாடுகளில் உள்ள விநாயகர் கோயில்கள் படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இந்த கண்காட்சியை அமைச்சருடன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மண்டல தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் கண்டுகளித்தனர்.

இலவச அனுமதி

கண்காட்சி அமைப்பாளர் சீனிவாசன் கூறுகையில், `விநாயகர் சிலைகள் கண்காட்சி வரும் 12ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு இலவசமாக அனுமதிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிடலாம்’ என தெரிவித்தார்.

Related Stories: