சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா தகுதி

துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடரில், ஹாங்காங் அணியை 40 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஹாங்காங் முதலில் பந்துவீசியது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரிஷப் பன்ட் சேர்க்கப்பட்டார். கே.எல்.ராகுல், கேப்டன் ரோகித் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர்.ரோகித் 21 ரன் எடுத்து (13 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) வெளியேறினார். அடுத்து ராகுலுடன் கோஹ்லி இணைந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 56 ரன் சேர்த்தனர். ராகுல் 36 ரன் எடுத்து (39 பந்து, 2 சிக்சர்) பெவிலியன் திரும்பினார்.

3வது விக்கெட்டுக்கு கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் எகிற ஸ்கோர் பறக்க ஆரம்பித்தது. இழந்த பார்மை மீட்க வேண்டும் என்ற நெருக்கடியுடன் விளையாடிய கோஹ்லி 40 பந்தில் 1 பவுண்டரி, 2 சிச்கருடன் அரைசதம் அடித்தார். மறு முனையில் சூரியகுமார் பவுண்டரியும், சிக்சருமாகப் பறக்கவிட்டு ஹாங்காங் பந்துவீச்சை துவம்சம் செய்தார். ஹாரூன் அர்ஷத் வீசிய கடைசி ஓவரில் சூரியகுமார் 4 இமாலய சிக்சர்களை தூக்கி அசத்தினார். அந்த ஓவரில் மட்டும் 26 ரன் கிடைக்க, இந்தியா 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது. கோஜ்லி 59 ரன் (44 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), சூரியகுமார் 68 ரன்னுடன் (26 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 5 ஓவரில் மட்டும் இந்தியாவுக்கு 78 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 193 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்து, 40 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக பாபர் ஹயாத் 41 ரன் விளாசினார். கின்சித் ஷா 30, ஜீஷான் அலி ஆட்டமிழக்காமல் 26 ரன் எடுத்தனர். இந்திய தரப்பில் புவனேஸ்வர், அர்ஷ்தீப், ஜடேஜா, அவேஷ் கான் தலா 1 விக்கெட் எடுத்தனர். தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்த இந்தியா ஏ பிரிவில் முதலிடம் பிடித்து (4 புள்ளி) சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories: