வாஜ்பாய், அத்வானி ஆதரவாளர்களை ஓரம் கட்டும் குஜராத் கோஷ்டி மார்பில் பாயும் வளர்த்த கிடா: குருவை மிஞ்சும் சிஷ்யர்கள்: கொதிக்கும் மூத்த தலைவர்கள்: பாஜ.வில் முற்றும் மோதல்கள்

‘வளர்த்த கிடா மார்பில் பாயும்’ என்பார்கள். இன்று நாடு முழுவதும் பாஜ என்ற கட்சி வேரூன்றி நிற்கிறது என்றால், அதற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானியின் உழைப்பும், அர்ப்பணிப்பும்தான் முக்கிய காரணம். ஆர்ஆஸ்எஸ்.சின் ஆசியுடனும், அதன் கொள்கைகளுடனும் 1951ல் உருவான கட்சிதான் ‘பாரதிய ஜனசங்கம்.’ சுருக்கமாக, ‘ஜனசங்’ என்பார்கள். இதன் முதல் தலைவர் சியாம் பிரசாத் முகர்ஜி. சுதந்திரத்துக்குப் பிறகு நேருவின் இடைக்கால அரசில் அமைச்சராக இருந்த முகர்ஜி, தீவிர வலது சாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகுதான், 1951ம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தை தொடங்கினார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூத்த நிர்வாகியாக இருந்த தீனதயாள் உபாத்யாயா, இதன் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றார். ஆர்எஸ்எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்ட அப்போதைய இளம் தலைவர்களான வாஜ்பாய், அத்வானி போன்றோரும், ஜனசங்கத்தின் முக்கிய பொறுப்புகளை ஏற்று கட்சியை வழி நடத்தினர். 1952ல் நடந்த மக்களவை தேர்தலில் இக்கட்சி 3 இடங்களை பிடித்தது.

1975ம் ஆண்டு இந்திரா காந்தியால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட பிறகு, 1977ல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டபோது, பாரதிய ஜனசங்கமும் ஜனதா கட்சியும் இணைந்து, ஸ்தாபன காங்கிரஸ், சோசலிசக் கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தன. இதில், காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து, சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு அமைந்தது. மொரார்ஜி தேசாய் இந்தக் கூட்டணி அரசின் பிரதமராக பொறுப்பேற்றார். இந்த அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராக வாஜ்பாய் பொறுப்பேற்றார்.

*பாஜ உதயம்

 ஜனசங்கத்தின் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அதிகமானது. இந்த சூழலில்தான் ஆர்எஸ்எஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ‘ஜனசங்கத்தில் இருப்பவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பிலோ, ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பவர்கள் ஜனசங்கத்திலோ உறுப்பினராக இருக்கக் கூடாது,’ என அது அறிவித்தது. அப்போது வரையில் கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட அனைவரும், ஆர்எஸ்எஸ்.சிலும், ஜனசங்கத்திலும் இரட்டை உறுப்பினர்களாக இருந்து வந்தனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து, ஆர்எஸ்எஸ்.சால் கை காட்டப்பட்ட ஒரு பகுதியினர் ஆர்எஸ்எஸ் என்ற முகமூடியை கழற்றி விட்டு, கட்சி வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கினர். மற்றவர்கள் ஆர்எஸ்எஸ்.சில் பயணத்தை தொடர்ந்தனர். இந்த சூழலில் புதிதாக ஒரு அமைப்பு தேவைப்பட்ட நிலையில், 1980ம் ஆண்டு ஏப்.6ம் தேதி வாஜ்பாய், அத்வானி ஆகியோர் சிலருடன் சேர்ந்து பாரதிய ஜனதா கட்சியை தொடங்கினர். வாஜ்பாய் கட்சியின் தலைவரானார்.

*முதல் முறையாக ஆட்சி

1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் 2 இடங்களை மட்டுமே கைப்பற்றிய பாஜ, அயோத்தி ராமஜென்ம பூமி விவாகரம், அத்வானியின் ரத யாத்திரை, கட்சியின் தலைவராக அத்வானி நியமனம் என பல்வேறு வியூகங்கள் மூலம் 1990களில் நடந்த பல சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1991ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 120 இடங்களில் வென்றது. 1996ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 187 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக பாஜ கூட்டணி ஆட்சி அமைத்தது. மற்ற எந்த கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததால், பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ஜெயலலிதாவின் ஆதரவை பெற முடியாமல் போனதால், 13 நாட்களில் ஆட்சியை இழந்தது. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை பறிகொடுத்தார் வாஜ்பாய்.

*வாஜ்பாய் அரசு கவிழ்ப்பு

1998ம் ஆண்டு நாடு மீண்டும் பொதுத்தேர்தலைச் சந்தித்தது. வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார். எனினும், ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை 13 மாதங்களில் ஜெயலலிதா திரும்பப் பெற்றுக் கொண்டதால் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. மீண்டும் 1999ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இந்த தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 303 இடங்களில் வென்றது. பாஜ மட்டுமே 183 இடங்களில் கைப்பற்றியது. வாஜ்பாய் மூன்றாவது முறையாக பிரதமராகவும், அத்வானி துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர்.

*2004, 2009ல் தோல்வி

2002ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் தொடர்ந்து, 2004 மற்றும் 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜ தோல்வியடைந்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் தேசிய அரசியலில் பாஜவின் நிலைமை மோசமாகிவிடும் என்று பாஜ தலைவர்களும் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களும் கருதினர். இதனால், அவர்கள் குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கு கிடைத்த இமேஜை பயன்படுத்த எண்ணி, அவரது தலைமையிலேயே நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது என முடிவு செய்தனர். தனது சிஷ்யனாக இருந்த மோடி, தனக்கே தலைவனாவது அத்வானிக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோடியை பிரதமர் வேட்பாளராக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பாஜ தேர்தல் கமிட்டித் தலைவர் பதவி உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். ஆனால், கட்சியின் இதர தலைவர்கள் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் கட்சி பணியை தொடர வைத்தனர். இதன் பிறகுதான், மெல்ல மெல்ல கட்சியிலிருந்து அத்வானி ஓரம்கட்டப்பட்டார். அசிங்கப்படுத்தப்பட்டார்.

*ஓரம்கட்டப்பட்ட அத்வானி

2013ம் ஆண்டு பாஜ தேர்தல் பிரசாரத்தின் தலைவராக மோடி நியமிக்கப்பட்டார். தொகுதி வாரியாக சாதி, சமூகக் கட்டமைப்புக்கு ஏற்ப தேர்தலை எதிர்கொள்ளும் மோடி - அமித்ஷாவின் செயல் திட்டம் பெரிய அளவில் பாஜ.வுக்கு கைகொடுத்தது. 2014ம் மோடி தலைமையில் பாஜ வெற்றி அடைந்ததை அடுத்து, அரசியல் சன்னியாசத்தை நோக்கி அத்வானி தள்ளப்பட்டார். அத்வானி, வாஜ்பாய் போல், முரளி மனோகர் ஜோஷியும் பாஜ.வை உருவாக்கியவர்களில் ஒருவர். 2014 தேர்தல் வெற்றிக்கு பிறகு, இந்த மூவரும் புதிதாக உருவாக்கப்பட்ட, பாஜ வழிகாட்டுதல் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அந்தக் குழுவில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் ஆகியோரும் உண்டு. இனால், இது தங்களுக்கு அவமானம் என கருதிய வாஜ்பாய், அத்வானி, ஜோஷியும் மீண்டும் பொது வாழ்விற்கு வரவே இல்லை.

*மோடி, அமித்ஷா கூட்டணி

தனது ஆதிக்கத்தை கட்சியில் படிப்படியாக நிலைநாட்டி வரும் பிரதமர் மோடி, அவருடைய கண் அசைவுக்கு ஏற்ப செயல்படும் அவருடைய சிஷ்யன் அமித்ஷா, தங்களுக்கு கீழ் ஒரு தனி அணியை உருவாக்கினர். பிரதமர் மோடி, அமித்ஷா அண்ட் கோ கட்சியில் தனி காட்டு ராஜாவாக வலம் வந்து பாஜவின் அடித்தளமான ஆர்எஸ்எஸ் தலைவர்களை ஓரம்கட்ட நினைத்து பல்வேறு ‘ஆபரேஷன்’களை செய்தது. முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் செயல்பட்டு வந்த பாஜ, தற்போது படிப்படியாக பிரதமர் மோடி, அமித்ஷாவின் கைபிடிக்குள் சென்று கொண்டிருக்கிறது. அவர்களின் உத்தரவுக்கு செயல்பட தொடங்கி இருக்கிறது. அவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் வாஜ்பாய், அத்வானியின் ஆதரவாளர்கள் படிப்படியாக ஓரம் கட்டப்பட்டு வருகின்றனர். இதனால், கட்சியில் மூத்த தலைவர்கள் ஒவ்வொருவராக இருக்கும் இடம் தெரியாமல் போய் கொண்டிருக்கின்றனர். வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த சின்காவில் தொடங்கி தற்போது நிதின் கட்கரி வரை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

*கட்கரி, தலைவர்கள் நீக்கம்

பாஜ கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்டது நாடாளுமன்ற குழு. இக்குழுவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். சமீபத்தில் இக்குழுவில் மாற்றம் செய்யப்பட்டது. ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாஜ்பாய், அத்வானியால் வளர்க்கப்பட்டவர்கள். கட்கரி, சவுகானுக்கு பதிலாக தங்களின் ஆதரவாளர்களாக உள்ள கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, இக்பால் சிங் லால்புரா, கே.லட்சுமண், சுதா சதவ், சத்யநாராயண் ஜாடியா, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவாலை மோடி-அமித்ஷா கூட்டணி, புதிய உறுப்பினர்களாக சேர்த்துள்ளது.

*மோடிக்கு எதிர்ப்பு

பாஜ மத்திய தேர்தல் குழுவில் பாஜ தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ், ராஜஸ்தான் மாநில தலைவர் ஓம் மாத்தூர் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் அனைவரும் தேர்தல் குழுவிலும் இடம் பெற்றிருப்பார்கள். கட்கரி, சவுகான் இருவரும் தேர்தல் குழுவில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களுக்கும், பல்வேறு சமூகங்களுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக பாஜ விளக்கம் அளித்துள்ளது. பிற கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி, கட்சியில் முக்கிய பதவி என வழங்கப்பட்டு வருவதால் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுதொடர்பாக விமர்சித்திருந்த ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, ‘வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் உழைப்பால்தான் இன்று மோடி பிரதமராக முடிந்தது’ என்று பேசியது, பாஜ தலைமைக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

*ஜெயிக்க போவது யார்?

‘வரலாறு முக்கியம் அமைச்சரே...’ தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஒருவரை எளிதில் ஓரம்கட்டிவிடலாம். ஆனால், வரலாற்றை திருப்பி பார்க்கும்போது உண்மையை மறைக்க முடியாது. அன்று பதவி வழங்கி அழகு பார்த்தவர்கள், கட்சியை வளர்க்க போராடியவர்கள், கட்சியின் வளர்ச்சி பாதைக்கு அடித்தளம் அமைத்து கொடுத்த ஆர்எஸ்எஸ் தலைவர்கள் என அனைவரையும் தூக்கி எறிந்துவிட்டு பிரதமர் மோடி, அமித் ஷா அண்ட் கோ தனி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதனால், உட்கட்சி பூசலுக்கு பாஜவும் விதி விலக்க அல்ல என்று இந்த மோதல்கள் மூலம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. இதில் ஜெயிக்க போவது யார் என்று காலம் பதில் சொல்லும்.

*அமித்ஷா - யோகி குஸ்தி

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நாடாளுமன்ற குழுவில் இடமளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் அவரது பெயர் பரிந்துரைக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் அமித் ஷாவுக்கும், யோகி ஆதித்யநாத்துக்கும் இடையிலான மோதல்தான். மோடிக்கு அடுத்தபடியாக, பிரதமர் வேட்பாளராக யோகி நிறுத்தப்படலாம் என்று பேச்சு அடிப்பட்டு வருகிறது. இது, அமித்ஷாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மோடிக்கு பிறகு தான்தான் என்ற பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இதன் வெளிபாடுதான் யோகியுடன் மோதல் போக்கு. ஆனால், உண்மையில் மோடி இல்லையென்றால் அமித் ஷாவை யாரும் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்று மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மோடி இருக்கும் வரைக்கும்தான் அமித்ஷாவுக்கு மரியாதை என்று தெரிவித்துள்ளனர்.

*அத்வானி இல்லைன்னா மோடி இன்று இல்லை

1984ம் ஆண்டு 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து 1998ல் ஆளும் கட்சி என்ற நிலைக்கு பாஜ கட்சியை உயர்த்தியதில் அத்வானியின் பங்கு முக்கியமானது. அந்த சமயத்தில் அவர் விதைத்த விதைக்கான அறுவடையை செய்யும் வாய்ப்பு அத்வானிக்கு கிடைக்கவில்லை. வளர்த்து விடப்பட்ட மோடிக்கு, தனக்கு கிடைக்க வேண்டிய பதவியை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை அத்வானிக்கு ஏற்பட்டது. மோடியின் தொடக்க கால அரசியல் வாழ்க்கையில் அவருக்கு வழிகாட்டியாக செயல்பட்டு, கட்சியிலும் பதவிகளை அத்வானி வாங்கி கொடுத்தார். குஜராத் பாஜவை வளர்க்க மோடிதான் சரியான ஆள் என கைகாட்டி, அவரை கை தூக்கிவிட்டவர் அத்வானி. குஜராத் கலவரத்தை தொடர்ந்து முதல்வர் பதவியை இழக்க வேண்டிய நெருக்கடிக்கு மோடி தள்ளப்பட்டபோது, அவருக்கு அரணாக இருந்து அத்வானி மட்டுமே காப்பாற்றினார். அவர் இல்லாவிட்டால், மோடியால் இன்று பிரதமர் பதவி வரைக்கும் வளர்ந்திருக்க முடியாது. ஆனால், மோடியின் எதிர்ப்பால் 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற காந்தி நகர் தொகுதியில் இருந்து போபால் தொகுதியை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு அத்வானி தள்ளப்பட்டார். பின்னர், மோடி மீது கெட்ட பெயர் ஏற்படும் என்பதால், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானியை சமாதானப்படுத்தினர். இதை ஏற்று காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014ம் தேர்தலுக்கு பிறகு மோடியின் கீழ் அமைச்சரவையில் பணியாற்றுவது நெருடலாக இருக்கும் என்பதால், மக்களவை சபாநாயகர் அல்லது ஜனாதிபதி பதவியை அத்வானி எதிர்பார்த்தார். ஆனால், அதற்கும் மோடி சம்மதிக்கவில்லை. தனது அரசியல் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என அத்வானி திட்டமிட்டு இருக்கலாம். ஆனால் அதன் முடிவு எப்படி இருக்க வேண்டும் என்பதை மோடி தீர்மானித்து விட்டார்.

*எடியூரப்பாவுக்கு ஏன்?

75 வயது நிரம்பியவர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கக் கூடாது என கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு எதிராக கோஷ்டி பூசலை உருவாக்கி அவரது முதல்வர் பதவியை பறித்த மேலிடம், தற்போது அவருக்கு மீண்டும் பதவி வழங்கி உள்ளது. வரும் டிசம்பர் மாதம் குஜராத், இமாச்சலுடன் கர்நாடகாவுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. எடியூரப்பாவின் சமூகத்தை சேர்ந்தவர்களே கர்நாடகாவில் ஆட்சியை தீர்மானிக்கிறார்கள் என்பதால், அங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் எடியூரப்பாவுக்கு பதவி வழங்கி உள்ளனர்.

*ரப்பர் ஸ்டாம்ப்

பாஜவின் மூத்த தலைவர்களின் ஒருவர் வெங்கையா நாயுடு. ஆர்.எஸ்.எஸ் கோட்பாடுகளை தீவிரமாக செயல்படுத்தியவர். இவர், மோடி பிரதமரான பின்பு நிறைய கேள்விகள் கேட்டதால், கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க அரசியலமைப்பு பதவியான துணை ஜனாதிபதி பதவியை வழங்கி ஓரம்கட்டப்பட்டார். தற்போது, தேசிய தலைவராக உள்ள ஜே.பி.நட்டா ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போல் செயல்படுகிறார். எல்லா முடிவும் மோடி மற்றும் அமித்ஷாதான் எடுக்கிறார்கள். அறிவிப்பைதான் நட்டா வெளியிடுகிறார். இதேபோல்தான் பாஜவில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் ரப்பர் ஸ்டாம்பாக உள்ளனர்.

*ரவுடிகள், நடிகர், நடிகைகள்

அன்று தெரு, தெருவாக கட்சி வளர்த்த  தலைவர்களுக்கு மத்தியில், இன்று ‘ஆபரேஷன் தாமரை’ என்ற ஆயுதம் மூலம்  தங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது என்று பிரதமர் மோடி, அமித் ஷா அண்ட் கோ  நிரூபித்து வருகிறது. நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட  பிரபலங்கள், மாற்று கட்சி எம்எல்ஏக்கள், செல்வாக்கு மிக்க தலைவர்களை  இழுத்து போட்டு கட்சி தீவிரமாக செயல்படுவதாக காட்டி வருகிறது. குறிப்பாக,  தமிழகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்படும் ரவுடிகள், குற்றவாளிகளை  கட்சியில் இணைத்து அவர்களுக்கு பதவி கொடுத்து அடைக்கலம் கொடுத்து வருகிறது.  அன்று கட்சிக்காக உயிரை கொடுக்க தலைவர்கள் தயாராக இருந்தார்கள். இன்று  அவர்களின் உயிரை காக்க பாஜவில் பெரும்பாலானோர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

*14 ஆண்டுகள் ஒதுங்கிய வாஜ்பாய்

2004ல் நடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்தது. காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மன்மோகன் சிங் பிரதமரானார்.  எதிர்க்கட்சி தலைவராக வாஜ்பாய் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அத்வானி எதிர்கட்சி தலைவரானார். இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையின் கீழ் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டப்பட்ட வாஜ்பாய்க்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதனால், 2005ம் ஆண்டில் மும்பை சிவாஜி பூங்காவில் நடந்த பாஜ வெள்ளிவிழா கொண்டாட்ட பேரணியில் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வாஜ்பாய் அறிவித்தார். இதன் பின் அவர் இறக்கும் வரை சுமார் 14 ஆண்டுகள் பொதுவாழ்வில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

Related Stories: