×

அதிக எரிபொருள் பயன்படுத்தினால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்: போலீஸ் அதிகாரிகளுக்கு ஏடிஜிபி எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு, டிஜிபி சைலேந்திர பாபுவின் சார்பில் ஏடிஜிபி வெங்கட்ராமன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப பெட்ரோல், மற்றும் டீசல் அளவை அறிவுறுத்தியபடி நிர்ணயித்து கொள்ளுமாறு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயம் செய்துள்ள அளவை விட அதிக எரிபொருள் பயன்படுத்தினால் அவ்வாறு பயன்படுத்திய அதிக எரிபொருளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.அதிகமாக பயன்படுத்தப்பட்ட எரிபொருளுக்கு சம்பந்தப்பட்ட வாகனம் பயன்படுத்தும் அலுவலரிடமிருந்து பணம் பிடித்தம் செய்யப்படும் என்று அரசாணையில் தெரிவித்துள்ளதால், காவல்துறை வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பிற்கு மிகாமல் திட்டமிட்டு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும்படி அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் வருடாந்திரமாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

காவல்துறையில் இயங்கும் அனைத்து வாகனங்களும், அவை இயங்கும் எல்லையின் அடிப்படையில் மேற்கண்ட வாகனங்கள் மாத எரிபொருள் உச்சவரம்பினை பயன்படுத்தும்படி அனைத்து பிரிவு காவல் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமை அலுவலகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்பைவிட எக்காரணத்தை முன்னிட்டும் கூடுதலாக எரிபொருள் பயன்படுத்தக் கூடாது. கூடுதல் எரிபொருள் பிடித்தம் செய்தால் அத்தொகையினை வாகனம் உபயோகித்த அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட வேண்டும். இந்த அறிவுரைகளை மிகவும் கடுமையாக பின்பற்றுமாறு அனைத்து அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags : ADGP , Excess fuel consumption will result in salary deduction: ADGP warns police officers
× RELATED போதைப்பொருள் விற்றவர்களின் ரூ.18 கோடி சொத்துகள் முடக்கம்: காவல்துறை பேட்டி