சென்னை: திருவனந்தபுரத்தில் நாளை மறுதினம் நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கேரளா செல்கிறார். அப்போது, கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசுகிறார். ஒன்றிய - மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சிக்காக, மண்டல குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொரு குழுவும் கூடி ஆலோசிப்பது வழக்கம். 29வது தென்மண்டல குழு கூட்டம் கடந்த ஆண்டு திருப்பதியில் நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் நிக்கோபார் தீவுகளை உள்ளடக்கிய 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் 3ம் தேதி (நாளை மறுதினம்) நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி, நதி நீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும், இந்த கூட்டத்தின் வாயிலாக அண்டை மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்னைகளை தீர்ப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும். குறிப்பாக முல்லைப்பெரியாறு, காவிரி உள்ளிட்ட பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், அந்த கூட்டத்தின் வாயிலாக தமிழகத்தின் உரிமைகளை நிலைநிறுத்தக்கூடிய நடவடிக்கைகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கருத்துக்களை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளார். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை மறுதினம் நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா செல்லும்போது, அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை தனியாக சந்தித்து பேசுகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினும், கேரளா முதல்வர் பினராயி விஜயனும் நல்ல நண்பர்கள் என்று பல்வேறு தருணங்களில் வெளிகாட்டியுள்ளனர்.அண்மையில் தனியார் செய்தி நிறுவன கருத்தரங்கில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயனுக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும், தனக்கு கேரளாவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறி இருந்தார். அதேபோல் ஒன்றிய அரசுக்கும் - மாநில அரசுக்கும் இடையேயாக சில பிரச்னைகளில் கருத்து மோதல்கள் உள்ளது. இதே நிலை கேரள அரசுக்கும் இருந்து வருகிறது.இந்த நிலையில்தான் மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசிக்கும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் மண்டல அளவிலான கவுன்சில் கூட்டங்கள் நடைபெற உள்ளது.
தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாளை (செப்டம்பர் 2ம் தேதி) காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் செல்கிறார். அன்றைய தினம், கேரள முதல்வர் பினராயி விஜயனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியாக சந்தித்து பேசுகிறார். அப்போது முல்லைப்பெரியாறு, சிறுவாணி, நெய்யாறு பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 3ம் தேதி 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அன்றைய தினமே சென்னை திரும்ப உள்ளார். கேரள முதல்வருடனான மு.க.ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பயணத்தின்போது தமிழக அமைச்சர்களும் சிலரும் உடன் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.