ஆட்டோ, மாட்டு வண்டிகளில் எடுத்து செல்ல தடை பொது இடங்களில் உள்ள விநாயகர் சிலைகளை 5 நாளில் கரைக்க வேண்டும்: ஊர்வல வழிமுறைகள் குறித்து போலீசார் அறிவுரை: சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னை: விநாயகர் சிலைகளை மாட்டு வண்டிகள், மீன்பாடி வண்டிகள், ஆட்டோவில் எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் உள்ள சிலைகளை 5 நாட்களுக்குள் எடுத்து சென்று கரைத்து விட வேண்டும் என்று ஊர்வலத்தின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்காக பொது இடங்களில் வைத்துள்ளனர். இந்து முன்னணி அமைப்பினர் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான சிலைகளை வைத்துள்ளதாக தெரிவித்தனர்.  இந்த சிலைகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் பூஜைகள் செய்யப்படுகிறது.

இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிடாமல் தடுப்பதற்காக தமிழகம்  முழுவதும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வரும் 4ம் தேதி ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலிலும் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளிலும் கரைக்கப்படுகிறது. சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் ஒவ்வொரு வருடமும் அதிக அளவில் சிலைகள் கரைக்கப்படும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோன்று, வடசென்னை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக காசிமேடு பகுதிகளிலும்,  திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களிலும், ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போதும் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் விழா குழுவினருக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பட்டாசுகளை வெடிக்கக் கூடாது, கோஷங்களை எழுப்பக் கூடாது, பூஜைக்காக பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களின் வழியாக மட்டுமே எடுத்துச் சென்று கடலில் கரைக்க வேண்டும். மசூதி, கிறிஸ்தவ ஆலயங்கள் வழியாக சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது போலீசாரின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். விநாயகர் சிலைகளை மாட்டு வண்டிகள், மீன்பாடி வண்டிகள், ஆட்டோ போன்றவற்றில் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மினி லாரி, டிராக்டர் ஆகியவற்றிலேயே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது சிலைகளை கரைக்கும் இடத்தின் அருகில், பட்டாசுகளை வெடிக்க கூடாது. பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை 5 நாட்களுக்குள் எடுத்துச்சென்று கரைத்து விட வேண்டும். விநாயகர் சிலை வழிபாட்டின் போது எழுப்பப்படும் கோஷங்கள் மாற்று மதத்தினரை புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் எளிதில் தீப்பிடிக்காத வகையிலான ஆஸ்பெட்டாஸ், இரும்பு தகடுகள் கொண்டு தற்காலிக குடில்களை அமைத்திருக்க வேண்டும். மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். விநாயகர் சிலையின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். விநாயகர் சிலை அமைக்கும் இடத்தில் மாற்று மதத்தினரின் வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி சாலைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒலி பெருக்கி உரிமம் காலை இரண்டு மணிநேரம் மற்றும் மாலை இரண்டு மணிநேரம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளுக்கு அனுமதி கிடையாது. விநாயகர் சிலை அமைக்கும் இடத்தில் மின்சார திருட்டை அனுமதிக்கக் கூடாது. பிளக்ஸ் போர்டுகள் கட்சி சார்ந்த அல்லது மதம் சார்ந்தவர்கள் பெயர்கள் இடம் பெற்றிருக்க கூடாது. 24 மணி நேரமும் இரண்டு தன்னார்வலர்கள் இருக்க வேண்டும். போதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மின் விநியோகம் தடை காலத்தில் உபயோகிக்க ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: