×

பஞ்சலோக வேல், அன்னாசி பழத்தில் செய்யப்பட்டு சென்னையில் வைக்கப்பட்டுள்ள வித, விதமான விநாயகர் சிலை

பெரம்பூர்: சென்னையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள வித, விதமான விநாயகர் சிலைகள் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் வித, விதமான விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுகின்றனர். சென்னை கொளத்தூர் தொகுதியில் பஞ்சலோக வேல் விநாயகர் மற்றும் தரணி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. கொளத்தூர் மூகாம்பிகை சந்திப்பில், வைக்கப்பட்டுள்ள பஞ்சலோக வேல் விநாயகர் சிலை 30 அடி உயரம் கொண்டது. இரும்பு, செம்பு, பித்தளை, வெள்ளி மற்றும் ஈயம் உள்ளிட்ட பஞ்ச உலோகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரை அடி அளவு கொண்ட 40,000 வேல்களால் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை மக்களை கவர்ந்துள்ளது.

‘’சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. கொளத்தூர் நண்பர்கள் குழுவால் 15 நாட்கள் 20 நபர்கள் கடின உழைப்பில் இந்த விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர். மோகன், பாபு, சிரஞ்சீவி உள்பட பலர் விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளனர். கொளத்தூர் பூம்புகார் நகர் பகுதியில் 40 அடி உயரத்தில் தரணி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கலச சொம்பு மற்றும் தேங்காய் கொண்டு செய்யப்பட்ட விநாயகர் செய்வதற்கு 4000 மட்டை தேங்காய், 2000 சோளம் மற்றும் 2 கட்டு  கரும்பு.  3600 கலச சொம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சென்னை திருவிக.நகர் திருவள்ளுவர் தெருவில் ஒன்றரை டன் அன்னாசி பழத்தில் 12 அடி உயர கொண்ட விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு வித, விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.

சென்னை தண்டையார்பேட்டை, ஆர்.கே. நகர், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை,  திருவொற்றியூர் உள்ளிட்ட காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 338 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. பூக்கடை சரகத்துக்கு உட்பட்ட சவுகார்பேட்டை, யானைகவுனி, கொத்தவால்சாவடி, முத்தியால்பேட்டை, மண்ணடி, பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் 88 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது. விநாயகர் சிலைக்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகர் சிலையை காசிமேடு, திருவொற்றியூர், பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கின்றனர்.

Tags : Pangaloga Vale ,Vijayakar ,Chennai , Panchaloka Vel is a form of Ganesha statue made of pineapple fruit and kept in Chennai
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...