திருத்தணி முருகன் கோயில் குடியிருப்பில் மட்டன் சாப்பிட்டு அதிகாரிகள் கும்மாளம்: சமூகவலை தளத்தில் வீடியோ வைரல்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான குடியிருப்பில் மட்டன், சிக்கின் சாப்பிட்டு அதிகாரிகள் கும்மாளமிட்டது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் பஸ், ரயில்களில் பக்தர்கள் வந்து முருகனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து வருகின்ற பெரும்பாலான பக்தர்கள், கோயில் வளாகத்தில் உள்ள குடியிருப்புகளில் தங்கியிருந்து மறுநாள் அதிகாலையில் அபிஷேகம் தரிசனம் செய்கின்றனர். சிலர் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு செல்கின்றனர்.

இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில், கார்த்திகேயன் குடியிருப்பு, தணிகை இல்லம், சரவணன் பொய்கை குடியிருப்பு உள்ளது. இதில் அறைகள் மற்றும் காட்டேஜ் கள் உள்ளன. இதில், அரைநாள் காட்டேஜ் என்றால் 750 ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது. முழுநாள் காட்டேஜ் என்றால் 1500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதற்கு குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். பக்தர்கள் வரும்போது ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அறைகள் கொடுக்கப்படுகிறது. இந்தநிலையில், சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், திருத்தணி கார்த்திகேயன் குடியிருப்பில் காட்டேஜ் 69ல் சூப்பிரண்டுகள் கலைவாணன், வித்யாசாகர் ஆகிய இருவரும் சிக்கன், மட்டன், முட்டைகளுடன் ருசித்து சாப்பிடுகின்றனர்.

இந்த காட்சியை கண்ட முருக பக்தர்களும் பொதுமக்களும் கடும் வேதனை அடைந்துள்ளனர். சமூகநல ஆர்வலர்களும் ஆதங்கப்படுகின்றனர். கோயில் குடியிருப்பில் சைவத்தைத் தவிர வேற எதுவும் அனுமதிக்க கூடாது. கோயில் அதிகாரிகள், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு கோயில் துணை ஆணையர் விஜயா உடந்தையாக இருந்திருக்கலாம். மேற்கண்ட அதிகாரிகள் மூவரும் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகின்றனர். பக்தர்கள் கோரிக்கைகள் எதையும் இவர்கள் நிறைவேற்றுவது கிடையாது. மேலும் இந்த அதிகாரிகளின் பேச்கை கேட்காத ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர். எனவே, இந்த விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: