×

போச்சம்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம்

*புனித நீராட வந்தவர்கள் ஏமாற்றம்

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி அருகே மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில், வரலாறு காணாத வகையில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால், புனித நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியான பெங்களூரு மற்றும் நந்திமலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

இதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்திறப்பு அதிகரிப்பால், தென்பெண்ணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில், மாவட்டத்தின் உள்புற பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவேரிப்பட்டணம், மடம், நெடுங்கல், பேரூஅள்ளி, அகரம், பண்ணந்தூர், பாரூர், அரசம்பட்டி, மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
 மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் குடும்பத்துடன் லாரி, டெம்போ, கார் மற்றும் டூவீலர்களில் வந்து புனித நீராடி விட்டு செல்வது வழக்கம்.

ஆனால், கனமழையின் காரணமாக வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதையறியாத பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், நேற்று மஞ்சமேடு பகுதிக்கு புனித நீராடுவதற்காக வந்தனர். அங்கு பெருக்கெடுத்த தண்ணீரை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

 இந்நிலையில், தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 16250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஆற்றில் குளிக்கவோ, கடந்து செல்லவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மஞ்சமேடு பகுதியில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கும்பளம் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்

சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழையால் அணாசந்திரம், ஒட்டர்பாளையம், புளியரசி, ஏ.செட்டிப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. சூளகிரி -கும்பளம் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்கிறது. அப்பகுதியில் 6 அடி உயர பாலம் உள்ளது. 17 ஆண்டுக்கு முன்பு கன மழையால் பலத்தின் மேல்பகுதி அடித்துச் செல்லப்பட்டது. தற்போது, அந்த பாலத்தை வெள்ள நீர் தொட்டவாறு செல்கிறது. கனமழை நீடித்தால் பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்ல வாய்ப்புள்ளது. இதனால், அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கும் அபாயம் ஏற்படும்.

கிருஷ்ணகிரியில் 68.3 மி.மீ மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளது. நேற்று முன்தினமும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு(மில்லி மீட்டரில்) வருமாறு: ஓசூர் 97, கிருஷ்ணகிரி 68.3, சூளகிரி 56, தளி 30, அஞ்செட்டி 27, பெணுகொண்டாபுரம் 22.4, தேன்கனிக்கோட்டை 21, போச்சம்பள்ளி 10.2, ராயக்கோட்டை 5, நெடுங்கல் 2, பாரூர் 1.2 என மொத்தம் 340.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


Tags : Tenpenna river ,Bochampalli , Pechampalli,Thenpennai River, Floods
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...