சாலை விநாயகர், வெள்ளை பிள்ளையார், மாயப்பிள்ளையார் நூதன பெயர்களால் கவனம் ஈர்க்கும் விநாயகர் கோயில்கள்

*வியப்பில் ஆழ்த்தும் சேலம் சரகம்

*சதுர்த்தி நாளில் பக்தர்கள் பெருமிதம்

சேலம் : நூதன பிள்ளையார் கோயில்களால் சேலம் சரகம் கவனம் ஈர்த்து வருவதாக பக்தர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். அசுரர்களின் துன்பத்தில் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என்று சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த சிவனும், பார்வதியும் அளித்த பரிசு தான் கணங்களின் நாயகனான விநாயகப் பெருமான். அவர் அவதரித்த ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்திநாளில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்படுகிறது.

 இந்தவகையில் நாடு முழுவதும் இன்று (31ம்தேதி) விநாயகர் சதுர்த்திவிழா, கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் பல்வேறு பெயர்களில் நூதன முறைகளில் பிள்ளையாரை வடிவமைத்து பூஜிப்பதை பக்தர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் சேலம் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் நூதனமுறையில் வியப்பூட்டும் பிள்ளையார்கள் கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றனர் என்று பெருமிதம் கொள்கின்றனர் பக்தர்கள்.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருக்கும் வௌ்ளப்பிள்ளையார் கோயில் மிகவும் பிரசித்தி  பெற்றது. ஆத்தூர் நகரத்தில் தற்போது வறண்டு கிடக்கும் வசிஷ்டநதியில் ஒரு காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆடிமாதத்தில் கரைபுரண்டு வந்த வெள்ளத்தில் அப்பகுதி மக்கள், ஒரு விநாயகர் சிலையை கண்டெடுத்தனர். வெள்ளம் அழைத்து வந்த பிள்ளையார் என்று கூறி அதற்கு கோயில் கட்டினர்.

பிறகு வெள்ளப்பிள்ளையார் என்ற பெயரில் வழிபடத் தொடங்கினர். காலத்தின் சுழற்சியால் வெள்ளப்பிள்ளையார் ‘வெள்ளை பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகிறார். பிள்ளையார் அமர்ந்த இடம் செழிப்படைந்தது. பசுமைசூழ்ந்த இடம் நகரமானது. போக்குவரத்து அதிகரித்து பேருந்து நிலையமும் உருவானது. ஆனாலும் அந்த இடத்திலேயே அமர்ந்து இன்றளவும் அருள்பாலித்து வருகிறார் வெள்ளை பிள்ளையார்.

சேலம்-நாமக்கல் சாலையில் இருக்கிறது மாயப்பிள்ளையார் திருக்கோயில். கருவறையில் இருந்து மாயமான பிள்ளையார், அதன் கீழ்தளத்தில் மறைந்து மாயமாகி விட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனால் மாயப்பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார் என்பது தலவரலாறு. உடலில் ஏற்படும் தோய்நோல்கள் தொடர்பாக இந்த பிள்ளையாரை வேண்டிக் கொண்டால் அவை நம்மை அண்டாது. மருகு, கொப்பளங்கள் போன்றவை இங்குள்ள பிள்ளையாரை வழிபட்டால் மாயமாகி விடும். மக்களின் துன்பங்களை மாயமாக்குவதாலும் இவர் மாயப்பிள்ளையார் என்று அழைக்கபடுவதாக கூறுகின்றனர் ஆன்மீக முன்னோடிகள்.     

தர்மபுரி-சேலம் சாலையில் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது பல நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த வாய்ந்த சாலை விநாயகர் திருக்கோயில். விநாயகர் புராணங்களில் முமு முதற்கடவுளாக போற்றப்படுகிறார். பண்டைக்காலத்தில் மன்னர்கள், நல்லகாரியங்களை செய்யும் போதும், போருக்குச் செல்லும் போதும் விநாயகரை வழிபட்டுச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது.

 இப்படி மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அதியவனமாக இருந்த இப்பகுதியில் வழிபாட்டுக்காக கட்டப்பட்டது தான் இந்த விநாயகர் கோயில். குறிப்பாக போர்க்காலங்களில் இந்த விநாயகரை வழிபட்டசெல்லும் போது உயிர் பலிகள் குறைந்துள்ளது. காலத்தின் சுழற்சியால் இந்த இடம் நகரமாக மாறியது. ஆனால் விநாயகர் அதே இடத்தில் அப்படியே அமர்ந்து அருள் பாலித்து வருகிறார்.

அன்றைய காலகட்டத்தில் போரில் உயிர்பலிகள் நடக்காமல் காத்தவர், இப்போது சாலை விபத்துகளில் இருந்து மக்களை காக்கும் சர்வ வல்லமை படைத்த கடவுளாக அருள்பாலிக்கிறார் என்பது தலவரலாறு.கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூரில் இருக்கிறது இரட்டை விநாயகர் திருக்கோயில். ஒரு சமயத்தில் சிவபெருமானை பிரிந்த பார்வதிதேவி, தனியாக தவம் செய்தார். அப்போது விநாயகர் தன்னைப்போலவே ஒரு வடிவத்தை உருவாக்கி, பிரிந்த பெற்றோர் ஒன்று சேர பிரார்த்தித்தார்.

இதை உணர்த்தும் வகையில் அரிதாக சில இடங்களில் இரட்டைபிள்ளையார் கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களின் கருவறையில் 2பிள்ளையார்கள் அருள்பாலிக்கின்றனர். இதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூரிலும், சேலம் மாவட்டம் ஆத்தூரிலும் இரட்டை பிள்ளையார் கோயில் இருப்பது சிறப்பு. தேய்பிறை சதுர்த்தியில் அருகம்புல் மாலை அணிவித்து இரட்டை பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும் என்பது ஐதீகம். இந்தவகையில் கோட்டைபிள்ளையார், குண்டுபிள்ளையார், தேர்முட்டிபிள்ளையார் என்று இன்னும் எத்தனையோ வடிவங்களில் சேலம் சரகத்தில் பிள்ளையார் கோயில்கள் பக்திமணம் வீசிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: