×

விவசாயம், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வைப்பாறு-தாமிரபரணி ஆறு இணைக்கப்படுமா?

*விளாத்திகுளம் தொகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு

விளாத்திகுளம் : வைப்பாற்றுடன் தாமிரபரணி ஆற்றை இணைக்க வேண்டும் என்று விளாத்திகுளம் தொகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வைப்பாறு தேனி அருகே உள்ள வருசநாடு மலையில் உருவாகி விருதுநகர் மாவட்டம் வழியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளத்தை அடுத்து வைப்பாறு கிராமத்தின் அருகே கடலில் கலக்கிறது.

 சுமார் 130 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வைப்பாறு விளாத்திகுளம் தொகுதி கிராம மக்களின் விவசாயத்தின் உயிர் நாடியாக கருதப்படுகிறது. வைப்பாற்றில் இருக்கன்குடியில் நாகர்ஜுனா ஆறு இணைகிறது. வைப்பாற்றின் குறுக்கே வெம்பக்கோட்டை அணை, இருக்கன்குடி அணை உள்ளிட்ட அணைகள் கட்டப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வைப்பாற்றின் மூலம் விருதுநகர், சாத்தூர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பட்டு வருகின்றனர். இருக்கன்குடியில் 2004ம் ஆண்டு சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் முத்தலாபுரம், அயன்ராஜாபட்டி, மாசார்பட்டி, மேலக்கரந்தை, வேலிடுபட்டி, விளாத்திகுளம், வைப்பாா், கீழவைப்பார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் வைப்பாறு ஆற்றுப்படுகை முழுவதும் சீமை கருவேல மரங்கள் பரவி ஆற்றுப்படுகையின் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் குறைந்து விட்டது. தற்போது பருவ மழையும் பொய்த்து விட்டதால் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட வைப்பார் ஆற்றுப்படுகைக்கு அருகே உள்ள கிராமங்களில் போதிய குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நம்பியே விளாத்திகுளம் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரம் இருந்து வருகிறது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வைப்பாறு ஆற்றுப்படுகையில் சீமை கருவேல மரங்கள் இல்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதுகாப்பாக இருந்தது. மேலும் விவசாயத்திற்கு தேவையான நீரும் தொடர்ந்து கிடைத்து வந்தது. ஆனால் தற்போது சீமை கருவேல மரங்கள் அதிகமாக பரவி காணப்படுவதால் நிலத்தடி நீர் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இவை வைப்பாறு நீர் பல்வேறு கிராமங்களுக்கு சென்றடைவதற்கு தடையாகவும் உள்ளது.

வெம்பக்கோட்டை அணை முழுவதும் நிரம்பினாலும் அதன் பின்பு இருக்கன்குடி அணை நிரம்பிய பின்னரே விளாத்திகுளம் பகுதிக்கு வைப்பாற்று நீர் வர முடியும். கடந்த 20 ஆண்டுகளாக விளாத்திகுளம் வைப்பாறு முழுமையான நீர் பெருக்கு வரவில்லை.இதனால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாசனத்திற்கான நீர் மற்றும் குடிநீர் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

எனவே வைப்பாற்றுடன் தாமிரபரணி ஆற்றை இணைப்பதன் மூலம் வைப்பாறு வற்றாத ஜீவநதியாக மாறி விளாத்திகுளம் தொகுதி விவசாயிகள் பாசனத்திற்கான நீரையும் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீரும் தொடர்ந்து கிடைக்கும். நிலத்தடி நீரை பாதிக்கும் சீமை கருவேல மரங்களை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்களை கொண்டு மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு செய்வதன் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். புவியியல் ரீதியாக வைப்பாறு-தாமிரபரணி இணைப்பதில் சிறு, சிறு சிக்கல்கள் இருப்பினும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்தினை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கலாம் என்கின்றனர் விவசாயிகள்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாய சங்க தலைவர் வரதராஜன் கூறுகையில், ‘விளாத்திகுளம் தொகுதி மக்கள் விவசாயத்திற்காகவும் குடிநீருக்காகவும் வைப்பாற்றினை சார்ந்தே உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக பருவமழை பொய்த்தது, வைப்பாற்று படுகையில் அதிகமான சீமை கருவேல மரங்கள் வளர்ந்த காரணங்களால் விவசாயத்திற்கு நீர் கிடைப்பதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வைப்பாற்றுடன் தாமிரபரணி ஆறு இணைக்கப்படும் என்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

பின்பு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை. வைப்பாற்றுடன் தாமிரபரணி இணைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஆண்டிற்கு சுமார் ரூ.300 கோடி வரையில் அரசுக்கு செலவு குறையும். விளாத்திகுளம் பகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து நீர் கிடைக்கும். மேலும் வைப்பாற்றில் உள்ள ஊற்றுகள், கிணறுகளின் மூலமும் நீர் கிடைக்கும். எனவே தமிழக அரசு வைப்பாறு-தாமிரபரணி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இத்திட்டம் நிறைவேறினால் குடிநீருக்காக வல்லநாடு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் இருக்காது என்றார்.

மரங்கள் மக்கள் இயக்கம்

விளாத்திகுளம் வைப்பாறு புத்துயிர் பெறும் வகையிலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும் மரங்கள் மக்கள் இயக்கம் விளாத்திகுளம் பேரூராட்சியுடன் இணைந்து விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட வைப்பாறு வடிநிலப்பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை தொடர்ந்து அகற்றி வருகிறது.

முத்தலாபுரத்தில் தடுப்பணை


வைப்பாற்றின் குறுக்கே கீழ்நாட்டுகுறிச்சி, நம்பிபுரம் ஆகிய பகுதியில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். இதே போன்று முத்தலாபுரத்திலும் தடுப்பணைகள் அமைப்பதன் மூலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் பயன் பெறுவர்.



Tags : Vaiparu-Thamirapharani river , Vilathikulam,Vaiparu, Thaamirabharani
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...