விபத்துகளை தவிர்க்க காத்தாடிமட்டம் சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

ஊட்டி : விபத்துகளை தவிர்க்க ஊட்டி அருகேயுள்ள காத்தாடிமட்டம் பகுதியில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊட்டியில் இருந்து மஞ்சூர், எடக்காடு, தங்காடு, மணிஹட்டி, மேலூர் ஒசஹட்டி, மஞ்சக்கொம்பை, தூதூர்மட்டம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக காத்தாடிமட்டம் சாலை உள்ளது. தினமும் குறைந்தபட்சம் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்வழித்தடத்தில் செல்லும்.

காத்தாடிமட்டம் முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ளது. மூன்று சாலைகளை இணைக்கும் முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ளது. ஆனால், இப்பகுதியில் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. இதனால், மஞ்சூர் வழித்தடத்தில் இருந்து வரும் வாகனங்களும், ஊட்டியில் இருந்து செல்லும் வாகனங்கள் மற்றும் தங்காடு சாலையில் இருந்து வரும் வாகனங்களும் வேகமாக வரும் போது விபத்து ஏற்படுகிறது.

நேற்று இச்சாலையில் இரு சக்கர வாகனங்கத்தில் வேகமாக சென்ற இருவர், ஊட்டியில் இருந்து வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் வேகத் தடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

குறிப்பாக, ஊட்டி மற்றும் மஞ்சூர் செல்லும் சாலைகளில் ேடபிள் டாப் வேகத் தடைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதியில் ரவுண்டானா அமைக்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோன்று ஆறாவது மைல் (பாலகொலா சந்திப்பு) பகுதியில் ஆக்கிரமிப்புக்களை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். இதன்மூலம், இப்பகுதியில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க வாய்ப்புள்ளது என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: