×

விழுப்புரம், மைசூர் சாலை சந்திக்கும் நாகப்பட்டினம் புத்தூர் அருகே ட்ரம்பெட் வடிவில் பாலப்பணி துவக்கம்

* வாகன ஓட்டிகள் வந்து செல்ல போக்குவரத்து எளிதாக இருக்கும்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் புத்தூர் அருகே ட்ரம்பெட் வடிவிலான பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி முடிந்தால் நாகப்பட்டினம் வந்த செல்ல வாகன ஓட்டிகளுக்கு எளிதான போக்குவரத்தாக அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்- விழுப்புரம் நான்கு வழிச்சாலை பணி நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டு நடந்து வருகிறது.

முதல் கட்டமாக நாகப்பட்டினம் தொடங்கி- சட்டநாதபுரம் இடையே 56 கிலோ மீட்டர் தூர பணி ரூ.2 ஆயிரத்து 5 கோடி மதிப்பில் போடப்படுகிறது. இந்த பணி கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இப்பணிகள் அக்டோபர் மாதம் 5ம் தேதி நிறைவு பெற வேண்டும்.

அதே போல் 2ம் கட்ட பணிகள் சட்டநாதபுரம் தொடங்கி - புண்டியங்குப்பம் வரை 56.8 கிலோமீட்டர் தூரம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பணிகள் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த பணிகள் வரும் 2023ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி நிறைவு பெற வேண்டும். 3ம் கட்டமாக புண்டியங்குப்பம் தொடங்கி - புதுச்சேரி வரை 38 கிலோமீட்டர் தூரம் போடப்படவுள்ளது.

 கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி பணி தொடங்கி 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி நிறைவு பெற வேண்டும். 4ம் கட்ட பணி புதுச்சேரி தொடங்கி விழுப்புரம் நிறைவு பெறுகிறது. இது 29 கிலோ மீட்டர் தூரம் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி பணிகள் தொடங்கப்பட்டு 203ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி நிறைவு பெற வேண்டும்.

இதேபோல நாகப்பட்டினத்தில் இருந்து மைசூர் வரையிலான 2 வழிச்சாலை பணிகள் தொடங்கப்பட்டு- தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலம் வரை நிறைவு பெற்றுள்ளது. தற்பொழுது நீடாமங்கலம் தொடங்கி நாகப்பட்டினம் வரை 65.37 கிலோமீட்டர் தூர பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி தொடங்கப்பட்டது. வரும் 2023ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி நிறைவு பெற வேண்டும். ரூ.950 கோடி மதிப்பில் நடந்து வருகிறது.

இவ்வாறு நாகப்பட்டினம் விழுப்புரம் சாலையும் நாகப்பட்டினம் மைசூர் சாலையும் நாகப்பட்டினம் புத்தூர் அருகே சந்திக்கிறது. இதனால் இப்பகுதியில் ட்ரெம்பெட் வடிவிலான மிகப்பெரிய பாலம் அமையவுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பாலம் பணிகள் நிறைவு பெற்று சாலை பணிகளும் நிறைவு பெற்றவுடன் நாகப்பட்டினத்தில் இருந்து எளிதாக விழுப்புரம் செல்ல முடியும். அதே போல் நாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூருக்கு எளிதாக செல்ல முடியும்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழு செயலாளர் அரவிந்தகுமார் கூறியதாவது, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல்சிங்காரவேலர், எட்டுக்குடி, திருநள்ளார் என அதிக அளவிலான சுற்றுலா தலங்களை கொண்டுள்ளது. ஆனால் தென் மாவட்டங்களை எளிதாக இணைப்பதற்கு சாலை வசதி இல்லை. பல ஆண்டு காலத்திற்கு பின்னர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் இரண்டு வழி சாலை, நாகப்பட்டினம் விழுப்புரம் நான்கு வழி சாலை பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

இந்த பணிகள் எல்லாம் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு பெற வேண்டும். ஆனால் நிலம் அபகரிப்பு, மணல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஆகிறது. இருப்பினும் சாலை பணிகள் நிறைவு பெற்றவுடன் நாகப்பட்டினம் மாவட்டம் முக்கிய இடத்தை பெறும் என்றார்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது, தஞ்சாவூர் நாகப்பட்டினம் இரண்டு வழி சாலையில் திருவாரூர் புறவழிச்சாலை 13 கிலோ மீட்டர் தூரம் அமையவுள்ளது. ஆனால் அந்த பணிகள் தவிர்த்து தஞ்சாவூர் நாகப்பட்டினம் இரண்டு வழிசாலை நடந்து வருகிறது.

திருவாரூர் புறவழிச்சாலைக்கு நிலம் எடுப்பு பணிகள் விரைந்து முடிக்கப்படும். அதே போல் விழுப்புரம், நாகப்பட்டினம் சாலை பணிகள் அமைய மணல் அதிக அளவில் தேவைப்படுகிறது. இதனால் சாலை அமைக்கும் பணி காலதாமதாக நடந்து வருகிறது. இந்த சாலைகள் எல்லாம் நாகப்பட்டினம் புத்தூர் அருகே ஒன்றாக இணைவுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க புத்தூர் அருகே ட்ரம்பெட் வடிவிலான பாலம் அமையவுள்ளது. இந்த பாலம் அமைவதற்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சாலை பணிகள் நிறைவுபெற்றவுடன் நாகப்பட்டினம் மாவட்டம் வந்து செல்ல போக்குவரத்து எளிமையாக அமையும் என்றார்.

Tags : Budhur ,Nagapattinam ,Villupuram ,Mysore , Trumpet shaped bridgework, Nagapatinam,Trumpet , Vilupuram, Mysore Road
× RELATED பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் போலீசுக்கு...