×

திண்டுக்கல்லில் தயாராகி அமெரிக்காவில் ஒலிக்கும் பறை இசை தோல் இசைக்கருவிகள் தயாரிக்க தோள் கொடுக்குமா அரசு

திண்டுக்கல்  : திண்டுக்கல் பகுதியை சுற்றியுள்ள தோல் இசைக்கருவிகள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் இசைக்கருவிகளை கூடுதலாக தயாரிக்க அரசு உதவி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். தமிழரின் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் கலந்த ஒரு விஷயம் இசை. அதிலும் தமிழரின் தொன்மையான தோல்இசைக்கருவிகளில் இருந்து வரும் இசை உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும்.

 திருவிழாக்களில் , சுபநிகழ்ச்சிகளில் ஒலித்த இந்த இசைக்கருவிகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. அதே போல இந்த இசைக்கருவிகள் சாதிய சாயமும் பூசப்பட்டதால், இசையை ரசிக்கும் பலர் அதனை வாசிக்க முயற்சி செய்வதில்லை. இந்த இசைக்கருவிகள் துக்க வீடுகளில் மட்டுமே வாசிக்கப்படும் என்ற ஒரு முத்திரையும் குத்தப்பட்டுவிட்டது. ஆனால் இந்த இசைக்கருவியை தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிக்க வைத்து வருகின்றனர் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர்.

திண்டுக்கல் அருகே உள்ள முள்ளிப்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்டது செட்டியபட்டி கிராமம். இந்த கிராமத்தில் ராஜ்குமார் அவரது தம்பி முத்துப்பாண்டி ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சூழல் காரணமாக இளம் வயதிலேயே தோல் இசை கருவிகள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள்.

கடந்த 4 தலைமுறைகளாக தோல்இசைக்கருவிகள் வாசித்து வருகின்றனர். தனது தந்தையிடத்தில் இத்தொழிலை கற்றுக்கொண்ட இவர்கள் கடந்த 18 ஆண்டுகளாக திண்டுக்கல், மதுரை, கோவை, சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தோல் இசை கருவிகள் வாசித்து வருகின்றனர். மேலும் அரசு விழாக்கள், கோவில் திருவிழாக்கள், திருமணவைபவங்கள், என அனைத்து சுப துக்க நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தப்பாட்டத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளனர்.

கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக கலை பண்பாட்டு துறை சார்பில் தமிழக அரசால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறந்த தப்பாட்ட கலைஞர் என கலைவளர்மணி என்ற விருதினை பெற்றுள்ளனர். மேலும் பல்வேறு விருதுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். தப்பாட்டத்தில் சிறந்து விளங்கும் இவர்கள் தோல் இசை கருவிகள் தயாரிப்பதிலும் கை தேர்ந்தவர்களாக உள்ளனர்.

குடிசை தொழிலாக தோல் இசைக்கருவிகளை செய்து வருகின்றனர். பறை இசை கருவிகள் நீண்ட நாட்களுக்கு உறுதி தன்மையுடனும், தரமானதாக இருப்பதற்கு வேப்பமர பலகையினை பயன்படுத்துகின்றனர். அதனை சிறுதுண்டுகளாக அறுத்து, வட்டவடிவாக ஒன்று சேர்க்கப்படுகிறது. பின்னர் பதப்படுத்தப்பட்ட கால்நடையின் தோலை அளவீடுக்கு தகுந்தாற் போல் வட்டமாக வெட்டி எடுத்து பாரம்பரிய முறைப்படி புளியங்கொட்டையில் காய்ச்சப்பட்ட பசையினை கொண்டு வட்டவடிவ பலகையில் தோலை ஒட்டி விடுகின்றனர்.  

இதில் ஐந்து தினங்களுக்கு இதமான வெப்பத்தில் காய வைத்து தோலை நன்றாக இழுத்து தப்பை மூட்டுகின்றனர். பின்னர் நெருப்பில் காய்ச்சி காலையிலும் மாலையிலும் அடித்து பார்த்து இசையின் தன்மையும், அதன் உறுதி தன்மையும் சோதித்து பார்க்கப்படுகிறது. பறை இசை கருவிகள் எட்டு இன்ச் முதல் 14 இன்ச் வரை தயாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பெருந்தமுரு, தமக்கு, துடும்பு, உடுக்கை, பம்பை, கிடுமுட்டி, உள்ளிட்ட தோல் இசை கருவிகளையும் இவர்கள் செய்து வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் இசைக்கருவிகள் உள்ளூர்களில் விற்பனையாவது மிகவும் குறைவு. ஆனால் வெளிநாடு வாழ்தமிழர்கள் ஐடி நிறுவனங்களில் வேலைகள் பார்த்தாலும் எஞ்சிய கலைகள், கலாச்சாரம் அழிந்து விடக்கூடாது என்று தோல்கருவிகளில் செய்யப்படும் இசைக்கருவிகளையே பயன்படுத்துகின்றனர். இதற்காக தனிப்பட்ட முறையில் திண்டுக்கல் பகுதியில் உள்ள இந்த நபர்களிடம் பறை இசை கருவிகள் செய்ய சொல்லி அதனை விமானம் மூலம் மலேசியா, லண்டன், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் தோல் இசை கருவிகளில் ஆர்வம் கொண்டவர்கள் உலக மரபு கலைக்கூடத்தின் வழியாக வாங்கி சென்றுள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக வேலை வாய்ப்பு இன்றி மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அப்பொழுது கோவில் திருவிழாக்கள் சுப நிகழ்ச்சிகள் அரசு விழாக்கள் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தனர் இந்நிலையில் தற்பொழுது அமெரிக்காவில் இருந்து பறை இசை கருவிகள் மற்றும் தமக்கு உள்ளிட்ட தோல் இசைக்கருவிகள் செய்வதற்கான ஆர்டர் வந்துள்ளது.

இங்கு தயாரிக்கப்பட்ட இசைக்கருவிகள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுவது ஆச்சர்யபட வேண்டிய செயல் இல்லை. ஆனால் இந்த இசைக்கருவிகளை வாசித்து பிழைப்பு நடத்துகின்றனர். இதற்கு ந்டுவில் இசைக்கருவி தேவைப்படுவோருக்கு மட்டுமே இவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் செய்து கொடுக்கின்றனர்.

ஆனால் துக்க வீடுகளில் வாசிக்கும் இவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் இன்றும் நீடித்துகொண்டு தான் இருக்கிறது. இது போன்ற நிகழ்வுகளால் இசைக்கருவிகளை தயாரிக்கும் கலைஞர்கள் தாழ்வுமனப்பான்மைக்கு ஆளாகின்றனர். இவர்களால் முழுநேர தொழிலாக இந்த இசைக்கருவிகள் தயாரிக்கும் தொழிலை செய்ய முடியவில்லை. சாதி ஒரு தடையாக இருக்கிறது.

மின் இணைப்பு பெறுவது, அதனை எப்படி சமாளிப்பது என்று பொருளாதார ரீதியிலும் இவர்கள் பின்தங்கி உள்ளனர். இது போல திண்டுக்கல் பகுதியை சுற்றி இசைக்கருவி தயாரிக்கும் கலைஞர்கள் இன்றளவும் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே இது போன்ற தோல் இசைக்கருவிகள் தயாரிக்கும் கலைஞர்களுக்கு தொழில் செய்வதற்க்கான உதவிகள் செய்து கொடுத்து அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் இயங்கி வரும் உலக மரபு கலைக்கூடத்தின் தலைவர் குருநாதன் கூறுகையில்:- தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் தோல் இசை கருவிகளுக்கு அயல்நாடுகளில் மிகவும் கிராக்கி அதிகம். நான் எனது கலைத்துறையில் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து உள்ளிட்ட பகுதிகளில் எனது நண்பர்கள் அங்கு வசிக்கின்றனர்.

இவர்களுக்கு தேவையான தோல்வி இசை கருவிகள் இங்கிருந்து நான் வாங்கி அவர்களுக்கு அனுப்புகிறேன். அந்த வகையில் திண்டுக்கல்லில் முத்துப்பாண்டி தயாரிக்கும் தோல் இசைக்கருவிகளுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதற்கு முன்னதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா நியூசிலாந்து மலேசியா ஆகிய பகுதிகளுக்கு 50க்கும் மேற்பட்ட தோலிசை கருவிகள் நான் வாங்கி அனுப்பி இருக்கிறேன்.

கடந்த மாதம் ஒன்பது பறை இசை கருவியும் ஒரு தமக்கு உள்ளிட்டவைகளை தயார் செய்து கேட்டிருந்தேன். அதை நான் வாங்கி சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்காவில் உள்ள எனது நண்பர்களுக்கு அனுப்பி உள்ளேன்’’ என்றார்.

Tags : Govt ,Dindukal ,United States , Dindigul,Musical leather instruments,leather instruments,
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து