×

அண்ணாநகர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 300 ஆண்டுகள் பழமையான நடராஜர், மாரியம்மன் சிலைகள் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை

சென்னை: சென்னை அண்ணாநகர் 5வது மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பழங்கால சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சிலை திருட்டு தடுப்பு பிரிவு எஸ்பி ரவி, டிஎஸ்பி முத்துராஜா, இன்ஸ்பெக்டர்கள் ரவீந்தரன், வசந்தி ஆகியோர், அண்ணாநகரில் குறிப்பிட்ட வீட்டில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். அதில், அமர்ந்த நிலையில் 40 கிலோ எடை கொண்ட பீடத்துடனான ஒரு மாரியம்மன் சிலை, 13 கிலோ எடை கொண்ட நடன கோலத்திலான நடராஜர் சிலை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அந்த 2 சிலைகளுக்கான ஆவணங்கள் வீட்டின் உரிமையாளர்களிடம் இல்லை. அவர்கள், தங்கள் பெற்றோர் காலத்திலிருந்தே இந்த சிலைகள் வீட்டில் இருப்பதாக கூறினர். ஆனால், அந்த சிலைகள் கோயில் பல்லக்குகளில் எடுத்து செல்வதற்கான அடையாளங்கள் இருந்தது. எனவே, 2 சிலைகளையும் சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். மேலும், சட்டவிரோதமாக 2 சிலைகளையும் பதுக்கி வைத்திருந்ததாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தி கொடுத்த புகாரின்படி சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட 2 சிலைகளை தொல்லியல் துறை நிபுணர் ஸ்ரீதரன் ஆய்வு செய்த போது, 2 சிலைகளும் 300 ஆண்டுகள் பழமையானது என்றும், இது சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய்க்கு விலை போகும் என்றும் தெரிவித்தார். அதைதொடர்ந்து, கைப்பற்றிய திருட்டு சிலைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Nataraja ,Mariamman ,Annanagar , Rescue of 300-year-old idols of Nataraja and Mariamman stashed in Annanagar house: Police intensive investigation
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மே 1ம் தேதி...