ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, சி.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017ம் ஆண்டு செப்டம்பரில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், உறவினர்கள், சசிகலாவின் உறவினர், ஓபிஎஸ், ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றது. 5 ஆண்டுகளுக்கு பிறகு  ஆணையம் கடந்த 27ம் தேதி 608 பக்கம் கொண்ட அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தது.

இந்த அறிக்கை தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒரு பொருளாக வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆணையம் அளித்த அறிக்கை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. வி.கே.சசிகலா, ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் டாக்டர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் ராமமோகன ராவ் உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஜெயலலிதா மரண வழக்கு  விசாரணை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ‘சிறப்பு புலனாய்வு குழு’ புதிதாக அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு  விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த குழு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர்  தலைமையில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழுவினர், சசிகலா, விஜயபாஸ்கர், ராம் மோகன்ராவ், டாக்டர் சிவக்குமார் ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்தி அதுதொடர்பாக அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்வார்கள். இதன் பிறகே ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மம் விலகுமா என்பது தெரியும்.

Related Stories: