×

விநாயகர் சதுர்த்தி விடுமுறை எதிரொலி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்

சென்னை: விநாயகர் சதுர்த்தி விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக நேற்று ஆம்னி பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது வழக்கம் போல் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில், ‘சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்வதற்கு சாதாரண நாட்களில் ரூ.800 முதல் ரூ.1,200 வரை கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆனால் தற்போது கூட்ட நெரிசல் காரணமாக ரூ.1,300 முதல் ரூ.2,000 வரை வசூல் செய்யப்படுகிறது. இதேபோல் திருச்சி, கோவை, மதுரை போன்ற அனைத்து ஊர்களுக்கும் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இவ்வாறு கூடுதல் தொகை வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். போக்குவரத்துத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘விநாயகர் சதுர்த்தி விடுமுறையின் போது ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக எங்களுக்கும் புகார் வந்தது. இதையடுத்து திடீர் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, சிறப்பு குழு நியமித்துள்ளோம். இக்குழு மூலம் சோதனை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.


Tags : Vinayagar Chaturthi holiday echoes higher fares in omni buses
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...