×

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 117 கடைகள் ஒரே நேரத்தில் ஏலம்; மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 117 கடைகள் ஒரே நேரத்தில் ஏலம் விடப்படும், என்று சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 சென்னை மாநகராட்சி கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மேயர் பிரியா தலைமை வகித்தார். துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம்  தொடங்கியதும் தீண்டாமை உறுதிமொழியை உறுப்பினர்கள் எடுத்து கொண்டனர். தொடர்ந்து கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானங்கள் வருமாறு: எழும்பூர் அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த சிலைக்கான தடையில்லா சான்றிதழ்க்கான பின்னேற்பு அனுமதி வழங்கப்படுகிறது.

சிறுசீரகம் செயலிழந்து தவிக்கும் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் விதமாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஏற்கனவே 1, 3, 9, 11, 14 மற்றும் 15வது மண்டலங்களில் ரத்த சுத்திகரிப்பு மையங்கள் (டயாலிசிசிஸ்) அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தன. தற்போது கூடுதலாக 4வது மண்டலம் இளங்கோ நகர், 7வது மண்டலம் அம்பத்தூர் பாடி, 15வது மண்டலம் செம்மஞ்சேரி ஆகிய 3 மண்டலங்களில் ரத்த சுத்திகரிப்பு மையங்களை தொடங்குவது அனுமதி அளிக்கப்படுகிறது. மண்டலம்-5, வார்டு-53ல் உள்ள மூலக்கொத்தளம் மயானபூமியில் எரிவாயு தகனமேடை கட்டும் பணி மற்றும் இதர மேம்படுத்தும் பணிக்கு நிலைக்குழு (பணிகள்), நிலைக்குழு (வரிவிதிப்பு மற்றும் நிதி) மூலமாக மன்றத்தின் அனுமதி வழங்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி மண்டலம் 1, 2, 5, 6, 7, 8, 9, 10, 12, 13 மற்றும் 15ல் துருப்பிடித்த மற்றும் பழுதடைந்த தெருவிளக்கு கம்பங்களை மாற்றி அமைக்க குறைந்த விலைப்புள்ளி அளித்த ஒப்பந்ததாரர்களின் ஒப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் வழங்கும் நிதியின் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மண்டலம்-4, வார்டு 40, 42 மற்றும் 43ல் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் (ரெட்டைகுழி தெரு சந்திப்பு முதல் தொற்றுநோய் மருத்துவமனை வரை) மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு குறைந்த விலை ஒப்பந்தம் கோரிய ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கி ஆணையிடுகிறது.

மாநகராட்சியின் வரி வருவாயை  பெருக்குவதற்காக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவின்படி 1 முதல் 15 வரை உள்ள மண்டலங்களில் தகுதியுள்ள வணிக வளாக  கடைகளில் உபயோகப்படுத்தக்கூடிய, ஏலம் விட தகுதியுள்ள 117 கடைகள் காலியாக  உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கடைகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் மெகா ஏலம்  விடப்படும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட உபயோகப்படுத்த முடியாத பள்ளிகளின் கட்டிடங்களை இடிக்க அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, பள்ளிகளில் பழமையான கட்டிடங்கள்  குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் பாடசாலை தெருவில் உள்ள தொடக்க பள்ளி,  எஸ்.எம்.நகர் சி.கல்யாணபுரம் மேல்நிலைப்பள்ளி, கணேசபுரம் மெயின் ரோட்டில்  உள்ள பள்ளி கட்டிடங்கள் என உபயோகிக்க தகுதியில்லா 3 பள்ளிகளின் கட்டிடங்கள் இடிக்கப்படும் உள்ளிட்ட 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Chennai Corporation , 117 shops belonging to the Chennai Corporation will be auctioned simultaneously; Resolution in the board meeting
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...