×

கல்லட்டி பகுதியில் இரவு முழுக்க கொட்டி தீர்த்த கனமழை ஊட்டி - மசினகுடி சாலையில் மண் சரிவு

ஊட்டி : ஊட்டி அருகே கல்லட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டதால் மசினகுடி வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவ மழை பெய்யும். சில சமயங்களில் இந்த மழை ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும். தென்மேற்கு பருவமழையின் போது காற்றுடன் கூடிய மழை பெய்யும்.

இதனால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுவது, மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். சில சமயங்களில் பொதுமக்கள் மீது மரங்கள் விழுந்து விபத்து ஏற்படுவதும் உண்டு. இந்நிலையில், இம்மாதம் மூன்றாம் தேதி துவங்கிய மழை 10 நாட்களுக்கு மேல் கொட்டி தீர்த்தது. குறிப்பாக, ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய பகுதிகளில் மழையின் தாகம் அதிகமாக காணப்பட்டது. பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல், பெரும்பாலான பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி அருகே முத்தோகரை பாலாட  மணிஹட்டி சாலையில் பெரிய அவிலான மண் சரிவு ஏற்பட்டதால், சாலை துண்டிக்கப்பட்டது. இத்தலார் பகுதியிலும் மண் சரிவு ஏற்பட்டது.

எடக்காடு பகுதியிலு் மண் சரிவு ஏற்பட்டது. இதனை உடனுக்குடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சீரமைத்தனர். மேலும், கூடலூர் பகுதியில் மரம் ஒன்று விழுந்ததில், பெண் தோட்ட தொழிலாளி உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மலை குறைந்து இருந்த நிலையில், தற்போது நீலகிரியில் மீண்டும் மழை பெய்ய துவங்கியுள்ள. கடந்த மூன்று நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, ஊட்டி மற்றும் குந்தா வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. நேற்று முன்தினம இரவு ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பல மணி நேரம் மழை பெய்தது. கல்லட்டி பகுதியில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால், ஊட்டி - மசனகுடி சாலையில் கல்லட்டி மலைச்சரிவுகளில் பல இடங்களிலும் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக இவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜேசிபி., வாகனங்களை கொண்டு உடனுக்குடன் மண்சரிவுகள் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். ஊட்டியில் தமிழகம் மாளிகை செல்லும் சாலையில், மரம் ஒன்று விழுந்ததால், இச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மரத்தினை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர்.

தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பெரிய அளவிலான மண் சரிவுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். நேற்று நீலகிரியில் பெய்த மழையின் அளவு மி.மீ.,ல்: ஊட்டி 35, நடுவட்டம் 26, கல்லட்டி 67, கிளன்மார்கன் 34, குந்தா 28, அவலாஞ்சி 11, எமரால்டு 10, கெத்தை 14, கிண்ணக்கொரை13, அப்பர்பவாணி 11, கேத்தி 11, கோத்தகிரி 22, கோடநாடு 27, கூடலூர் 15, தேவாலா 20, பந்தலூர் 11.

Tags : Ooty-Masinakudi ,Kallati , Ooty, Kallati, Masinakudi-ooty Road, Landslide
× RELATED கல்லட்டி நீர்வீழ்ச்சி வற்றியது: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்