யுஎஸ் ஓபன் டென்னிஸ்; செரினா, ஆண்டி முர்ரே முதல் சுற்றில் வெற்றி.! முன்னணி வீரர் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ், இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரே ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்று, 2ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் 5ம் இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ், முதல் சுற்றில் எதிர்பாராத வகையில் தோல்வியடைந்துள்ளார். முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், நடப்பு யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரோடு, சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ள அவர், யுஎஸ் ஓபனில் மட்டும் மகளிர் ஒற்றையர் பட்டத்தை 6 முறை கைப்பற்றியுள்ளார். நடப்பு யுஎஸ் ஓபனில் நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் செரினா வில்லியம்சுடன், மான்டிநீக்ரோவை சேர்ந்த டேன்கா கோவினிக் மோதினார்.

இதில் செரினா 6-3, 6-3 என நேர் செட்களில் கோவினிக்கை வீழ்த்தி, 2ம் சுற்றுக்கு முன்னேறினார்.  ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீரரான இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செரன்டோலோவை 7-5, 6-3, 6-3 என நேர் செட்களில் வீழ்த்தி, 2ம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் சர்வதேச தரவரிசையில் உள்ள கிரீஸ் வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ், இந்திய நேரப்படி இன்று காலை நடந்த முதல் சுற்றுப்போட்டியில் எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்து, வெளியேறினார். அவருடன் கொலம்பியாவின் இளம்வீரர் டேனியல் இலாஹி காலன் மோதினார். முதல் செட்டையே 6-0 என கைப்பற்றி, சிட்சிபாசை டேனியல் இலாஹி மிரட்டி விட்டார். தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-1 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் சிட்சிபாஸ் கை ஓங்கியது.

அந்த செட்டை சிட்சிபாஸ் 6-3 என கைப்பற்றினார். ஆனால் 4வது செட்டில் கடுமையாக போராடிய டேனியல் இலாஹி, அந்த செட்டை 7-5 என கைப்பற்ற, சிட்சிபாசின் யு.எஸ்.ஓபன் பட்டம் வெல்லும் கனவு முடிவுக்கு வந்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர்களான கனடாவின் ஆகர் அலியாசைம்,  ஸ்பெயினின் பாப்லோ கேரனோ பஸ்டா, நார்வே வீரர் காஸ்பர் ரூட் மற்றும் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்று, 2ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை கோகோ கவுஃப், செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா, கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு, கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரி மற்றும் பிரான்சின் கரோலின் கார்சியா ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.

Related Stories: