×

ஆசிய கோப்பை டி20; வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

ஷார்ஜா: ஆசிய கோப்பை டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்த ஆப்கானிஸ்தான் அணி, தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் ‘சூப்பர் 4’ சுற்று வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்புடன் களமிறங்குகிறது. அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் பஸல்லாக் பரூக்கி, நவீன் உல் ஹக் பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய இலங்கை அணி 2வது ஓவரிலேயே 5 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்தது, தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மூஜீப் உர் ரகுமான், ரஷித் கான், முகமது நபி ஆகியோரும் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர்கள் ஹஸ்ரதுல்லா, ரகமதுல்லா குர்பாஸ் இருவரும் அதிரடியாக ரன் குவித்தது, இலங்கை அணியின் தன்னம்பிக்கையை அடியோடு தகர்த்து வெற்றியை மேலும் எளிதாக்கியது. அதே உற்சாகத்துடன் ஆப்கானிஸ்தான் இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அந்த அணி 2 புள்ளிகளுடன் பி பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், வங்கதேச அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் கடும் நெருக்கடியுடனேயே களமிறங்குகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடிய டி20, ஒருநாள் போட்டித் தொடர்களில் தோல்வியைத் தழுவிய வங்கதேசம், அதில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப கடுமையாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Tags : Asia Cup T20 ,Bangladesh ,Afghanistan , Asia Cup T20; Bangladesh-Afghanistan teams clash today
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...