×

தொடர் மழை காரணமாக ஊட்டி - எடக்காட்டில் 200 அடி நீளத்திற்கு சாலை பிளந்தது : போக்குவரத்து துண்டிக்கும் அபாயம்

ஊட்டி :  தொடர் மழை காரணமாக, ஊட்டி - எடக்காடு சாலையில் எமரால்டை அடுத்த காந்தி கண்டி பகுதியில் சுமார் 200 அடி நீளத்திற்கு சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால், இச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கியது.

கடந்த மாதத்தில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் சிறிது இடைவெளிக்கு பின் இம்மாத துவக்கத்தில் இருந்து சுமார் 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக, மரம் விழுதல், மண்சரிவு உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட்டன. இவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டன.

இந்நிலையில், 10 நாட்கள் இடைவெளிக்கு பின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் மற்றும் ஊட்டி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் மழை தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் மண்சரிவு உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட கூடிய அபாயம் நீடிக்கிறது.

இதனிடையே, ஊட்டி - எடக்காடு சாலையில் எமரால்டு பகுதியை அடுத்த காந்திகண்டி பகுதியில் சுமார் 200 அடி நீளத்திற்கு சாலையில் பெரிய அளவிலான பிளவு ஏற்பட்டு ஒருபகுதி உட்புறமாக இறங்கியுள்ளது. மேற்புறமுள்ள தேயிலை தோட்டத்திலும் நிலம் இரண்டாக பிளந்துள்ளது.
வாகனங்கள் செல்லும் போது மண் இடிந்து விழாத படி மண் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.

பிளவு ஏற்பட்ட சாலை வழியாகவே அரசு பஸ்கள், காய்கறி ஏற்றி செல்லும் வாகனங்கள் உட்பட இதர வாகனங்கள் அனைத்தும் சென்று வருகின்றன. தற்போது, மழை மீண்டும் துவங்கியுள்ள நிலையில் சாலையில் ஏற்பட்டுள்ள பிளவால் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டு சாலை முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,``தொடர் மழை காரணமாக, காந்தி கண்டி பகுதியில் சாலையில் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. சாலைக்கு அடியில் நீரோட்டம் காரணமாக மண் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பிளவு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதுமட்டுமின்றி தேயிலை தோட்டம் மற்றும் விவசாய நிலத்திற்குள்ளும் பிளவு ஏற்பட்டுள்ளது.

இம்மாத துவக்கத்தில் பெய்த மழையின் போது லாரன்ஸ் பகுதியில் விவசாய நிலத்தில் பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டு தேயிலை செடிகள், காய்கறிகள் என மண் மூடியது. அதற்கு மிக அருகில் தான் இப்பகுதி உள்ளது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


Tags : Edakat , Ooty, Edakkadu, Road, heavy Rains,
× RELATED எடக்காட்டில் திமுக சார்பில் முதல்வர்...