×

போக்குவரத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படும் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கண்காணிக்கப்படுகிறதா?

* பேரிகார்டு, மின் விளக்குகளை பராமரிக்க வேண்டும்
* சாலை பாதுகாப்பிற்கு தொகை ஒதுக்கவும் கோரிக்கை

வடமதுரை : திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பேரிகார்டுகள் மற்றும் சோலார் விளக்குகளை பராமரிக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலை ஆனது நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளாக சரக்கு மற்றும் பயனியர் போக்குவரத்திற்கு அடிப்படையாக உள்ளது. நமது நாட்டில் உள்ள மாநில தலைநகரங்கள், முக்கிய துறைமுகங்கள் ரயில்வே சந்திப்புகள் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றை இணைப்பதுடன் நமது நாட்டின் பாதுகாப்பிற்கு மூல காரணமாக இடங்களையும் இணைக்கின்றன.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 6606 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில், 1472 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலமாகவும், மீதமுள்ள 5134 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தாலும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மேம்பாட்டு பணி மற்றும் பராமரிப்பு பணிகள், ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் வழங்கப்படும் நிதியின் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை அலகானது தலைமை பொறியாளரின் கீழ் 4 வட்டங்கள் மற்றும் 13 செயலாக்க கோட்டங்கள் , தரக்கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு ஆகியவற்றை கண்காணிப்பதற்கான 1 கண்காணிப்பு பொறியாளர் மற்றும் 4 தரக்கட்டுப்பாடு கோட்டங்களுடன் செயல்பட்டு வருகிறது.

மாநில தேசிய நெடுஞ்சாலை அலகின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் அகலப்படுத்துதல் மேம்படுத்துதல் உறுதிப்படுத்துதல் தரம் உயர்த்துதல் பாலங்களை சீரமைத்தல் திரும்ப கட்டுதல் பராமரித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில் திண்டுக்கல் டு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை பராமரிப்புகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டு வருகின்றனர்.

சாலையில் மணல் திட்டுக்கள் மற்றும் மணல் அதிகமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. சாலையில் மணல் அதிகமாக உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் சறுக்கி விழும் அபாயம் காற்று அடிக்கும் போது மணல் மற்றும் தூசியுடன் வாகன ஓட்டிகளின் கண்களில் படுவதால் விபத்து அதிகமாக நடந்து வருகிறது. மேலும் வாகனங்கள் வேகத்தை குறைக்க பயன்படுத்தப்படும் தடுப்பு பேரிகாடுகள் சரியான முறையில் வைக்கப்படால் உள்ளன.

இந்த தடுப்பு பேரிக்காடுகள் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு விபத்தையும் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றன. பேரிகாடுகள் இருப்பதற்கான இரவு நேரங்களில் மின்னும் விளக்குகள் சில இடங்களில் இல்லை இதனால் அதிக விபத்துக்கள் அப்பகுதியில் நடந்த வண்ணம் உள்ளன. சாலையில் டூ வீலர் செல்லும் பாதை கோடு அருகே முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளது.

இதனை தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை பார்க்கும் நபர்கள் அப்புறப்படுத்துவதில்லை. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் தெரு நாய்கள் அப்புறப்படுத்தப்படாமல் சாலையிலே காய்ந்து மக்கி விடுகின்றன. இதனால் இரவு நேரங்களில் மோட்டார் சைக்களில் வரும் நபர்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘இந்திய அரசானது சுங்கச்சாவடிகள் மூலம் போக்குவரத்து வாகனங்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தை சாலை பாதுகாப்பிற்கு சரிவர பயன்படுத்துவதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் சுங்க கட்டணம் அடிக்கடி உயர்த்துகின்றனர். உயர்த்தப்படும் சுங்க கட்டணத்திலாவது சாலை பாதுகாப்பிற்கு தொகை ஒதுக்க வேண்டி கோரிக்கை வைக்கின்றனர்.

வாகனங்களில் அடிபட்டு இறக்கும் தெரு நாய்களை அகற்றப்படாமல் இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. மேலும் சாலையில் உள்ள பேரிகாடுகளை முறையாக பராமரித்து விபத்துக்களை தடுக்கலாம், தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு முறைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thindukal-Trichy National Highway , Dindigul, Trichy, National Highways,transportation
× RELATED ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி...