×

காதல் திருமண விவகாரத்தில் பரபரப்பு சின்னமனூர் காவல் நிலையம் முன் மணமக்கள் கார் எரிப்பு

சின்னமனூர் : காதல் திருமண பிரச்னையில் சின்னமனூர் காவல் நிலையம் முன்பு மணமக்கள் வந்த காரை தீவைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே கூழையனூரைச் சேர்ந்த தினேஷ் (27). விவசாயி. பெற்றோர் இறந்து விட்டதால் உறவினர்களின் பாதுகாப்பில் இருந்தார். சின்னமனூர் காந்தி நகர் காலனியில் இவரது தாய்மாமன் பாண்டியன் வசித்து வருகிறார்.

 இவரது மகள் படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவரை, 8 ஆண்டுகளாக தினேஷ் காதலித்து வந்துள்ளார். இதற்கு அவரது தாய்மாமன் சம்மதிக்க மாட்டார் என்பதால், அவர்கள் குடும்பத்தினருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கிடையில் பாண்டியன் தன் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை தேடி வந்துள்ளார். அது பிடிக்காமல் நேற்று முன்தினம் திடீரென வீட்டில் இருந்து அவரது மகள் வெளியேறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியன் சின்னமனூர் காவல் நிலையத்தில் தன் மகளை, தினேஷ் கடத்திச் சென்றதாக புகார் செய்தார். இதற்கிடையில் வீட்டிலிருந்து வெளியேறிய பாண்டியனின் மகள் தினேஷிடம் தஞ்சம் அடைந்தார். இவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது போல் நேற்று கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

ஏற்கனவே போலீசில் பாண்டியன் புகார் தந்திருப்பதால் மணமக்கள் உடனடியாக சின்னமனூர் காவல் நிலையத்தில் பிரச்னையை தீர்த்து வைக்கக்கோரி தஞ்சம் அடைந்தனர். இதற்குள் பாண்டியனின் மகன் பெருமாள், திடீரென காவல் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மணமக்கள் வந்த காரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பினார். காரின் உள்பகுதி தீப்பற்றி எரிந்ததை பார்த்த பொதுமக்கள் சின்னமனூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சேட்டு தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு படையினர், காரில் பற்றிய தீயை அனைத்தனர். இதுகுறித்து தினேஷ், சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் பெருமாள் மீது புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர். காதல் திருமண விவகாரத்தில் காவல் நிலையம் முன்பாக காரை தீ வைத்து எரித்த சம்பவம் சின்னமனூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Chinnamanur police station , Chinnamanur, Fire Accident, Lovers Car, Police Station
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி