மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா கருங்குருவிக்கு உபதேசம் வழங்கிய லீலை

மதுரை : மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு நேற்று கருங்குருவிக்கு உபதேசம் வழங்கிய நிகழ்ச்சி நடந்தது.   மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று முதல் அடுத்த 10 நாட்களிலும் சிவபெருமானின் 10 திருவிளையாடல்கள் கோயிலில் அரங்கேற்றப்படவுள்ளன.

 நேற்று காலை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதியில் இறைவன் கருங்குருவிக்கு உபதேசம் திருவிளையாடல் நடத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் பட்டர்கள் கூறும்போது, ‘‘முற்பிறவியில் செய்த சிறிய பாவத்தினால் ஒருவன் மறுபிறப்பில் கருங்குருவியாக பிறக்கிறான்.  இந்த கருங்குருவியை காகங்கள் துன்புறுத்தியதால், உயிருக்குப் பயந்து நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரக்கிளையில் அந்த குருவி வருத்தத்துடன் அமர்ந்தது.

அந்த மரத்தின் கீழே நின்று கொண்டிருந்த சிலர், ‘பொற்றாமரைக் குளத்தில் நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும்’ என்று பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கேட்ட கருங்குருவி அங்கிருந்து நேரே மதுரைக்கு வருகிறது. பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வணங்கியதால், குருவியின் பக்திக்கு இரங்கிய இறைவன், ‘மிருத்யுஞ்சய மந்திரத்தை’ உபதேசித்தார். மேலும் ‘எளியான்’ என அழைக்கப்பட்ட கருங்குருவியின் இனத்தையே ‘வலியான்’ என மாற்றி அழைக்கச் செய்தார்’’ என்றனர்.

இரண்டாம் நாளான இன்று ‘நாரைக்கு மோட்சமளித்தல்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தொடர்ந்து தினமும் ஒரு திருவிளையாடல் என மாணிக்கம் விற்றது, தருமிக்கு பொற்கிழி அருளியது, உலவாக்கோட்டை அருளியது. பாணனுக்கு அங்கம் வெட்டியது, வளையல் விற்றது மற்றும் சுவாமிக்கு பட்டாபிஷேகம், நரியை பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, விறகு விற்றது என அடுத்தடுத்து நிகழ்த்தப்படும். விழா ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் அருணாச்சலம் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: