×

அதிமுக ஆட்சியில் நடந்த அவலம் அங்கன்வாடியை பிரித்து தீண்டாமை சுவர்: கீழக்கரை பகுதி மக்கள் வேதனை தீர்க்க நடவடிக்கை

கீழக்கரை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கீழக்கரை அருகே அங்கன்வாடியை இரண்டாகப் பிரித்து தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டதாக எழுந்துள்ள புகாரை சரி செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே முத்துச்சாமிபுரம் அங்கன்வாடி மையத்தில் 30 குழந்தைகள் பயின்று வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது, இம்மையத்தின் உள்பகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டு இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகிறது.

ஒருபுறம் மட்டுமே  மின்சார வசதி உள்ளது. நகரின் இருவேறு பகுதிகளைச் சேர்ந்த மழலைகள், இரு பிரிவாக பிரித்து அமர வைக்கப்பட்டுள்ளனர். இந்த தீண்டாமை சுவரை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து இம்மையத்தில் பணிபுரிபவர்களிடம் கேட்டபோது, ‘‘3 ஆண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சியில் இந்த சுவர் அமைக்கப்பட்டு மழலைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர். அப்படி பிரிக்காவிட்டால், ஒரு பகுதியினர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாது என்று கூறியதால், இதுபோன்று அப்போது பிரிக்கப்பட்டது.

இது மிகுந்த தவறான செயல். அனைத்து குழந்தைகளும் சமம் என்ற முறையில் தற்போது நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்’’ என்றார். பிஞ்சு மழலைகளை சமூக வேறுபாடு பார்த்து பிரித்து அமரவைப்பது வேதனையான செயல் என இப்பகுதி மக்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கடந்த ஆட்சியில் இதுபோன்று பிரிக்கப்பட்டிருக்கிறது. இடத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த பிரித்து வைத்தல் இருந்ததாக கூறப்பட்டது.
 
தற்போது விசாரணையில் இரு சமூக வேறுபாடு காரணமாகவே, இந்த பிரிவினை கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட தகவல் கிடைத்து மிகுந்த அதிர்ச்சியை தந்திருக்கிறது. இதன்பேரில் விசாரணை நடத்தி, மாவட்ட நிர்வாக துணையுடன் இதனை சரி செய்யும் நடவடிக்கையை வேகப்படுத்தியுள்ளோம்’’ என்றார்.

Tags : Anganwadi ,AIADMK ,Geezalkarai , AIADMK Ruled Anganwadi Separation Untouchability Wall: Action to Resolve Agony of People of Geezalkarai Region
× RELATED கடும் வெப்பம் காரணமாக டெல்லியில் ஜூன் 30 வரை அங்கன்வாடிகள் மூட உத்தரவு