×

சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்: 800 விசைப்படகுகள் கரைநிறுத்தம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் மற்றும் விசைப்படகை மீட்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தப்பட்டன. ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற தங்கச்சிமடம் படகு உரிமையாளர் நிஷாந்தன் உட்பட 6 மீனவர்கள், இலங்கை கடற்படையால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். மீன்களுடன் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றங்கள் விடுமுறை என்பதால் நேற்று காலை 6 மீனவர்களும் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.கைதான மீனவர்களையும், விசைப்படகையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ராமேஸ்வரம் துறைமுக கடற்கரையில் நிறுத்தப்பட்டன. மீனவர்கள் வராததால் ஆட்கள் நடமாட்டமின்றி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.


Tags : Rameswaram , Rameswaram fishermen strike for release of captive fishermen, 800 barges grounded
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...