வேளாங்கண்ணி பேராலயம் வண்ண விளக்குகளால் ஜொலித்தது ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா கொடியேற்றம்: ‘மரியே வாழ்க, அன்னையே வாழ்க’ கோஷம் எழுப்பிய பக்தர்கள்

நாகப்பட்டினம்: வண்ண விளக்குகளால் ஜொலித்த வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை  பேராலயத்தில் ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுளாக நடந்த ஆண்டு பெருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு வேளாங்கண்ணி பேராலய பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.  

தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியை புனிதம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து கடற்கரை சாலை வழியாக கொடி ஊர்வலம் நடந்தது. திருத்தல கலையரங்கங்களில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றுதல் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்தில் புனிதம் செய்யப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.  கொடியேற்றத்தையொட்டி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் பேராலயத்தில் குவிந்தனர். மரியே வாழ்க, அன்னையே வாழ்க என கோஷங்கள் எழுப்பினர். பேராலயம் வண்ண விளக்குகளால் ஜொலித்தது.

இந்நிலையில் இன்று முதல் செப்டம்பர்  6 வரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம், பேராலயத்தின் மேல்கோயில், போராலயத்தின் கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு பகலாக சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் வரும் 7ம் தேதி பெரிய தேர்பவனி நடைபெறுகிறது. பின்னர் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. 8ம் தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. மாலை கொடியிறக்கப்பட்டு பேராலய ஆண்டு விழா நிறைவுபெறுகிறது. விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து இரவு, பகலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.

Related Stories: