அண்ணாநகரில் பரபரப்பு வேலை செய்த வீட்டில் 30 சவரன் வைர நகை, ரூ.20 ஆயிரம் திருட்டு; இளம்பெண் கள்ளக்காதலனுடன் கைது

அண்ணாநகர்: வேலை செய்த வீட்டில் 30 சவரன்,  வைர நகைகள், ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடிய வேலைக்கார இளம்பெண்,  கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்வரன் (61). இவரது வீட்டில், சென்னை பாடி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த சுகுணா (26) வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில், மகேஷ்வரன் வீட்டு  பீரோவில் வைத்திருந்த 30 சவரன் நககைள், ரூ.7 லட்சம் மதிப்புள்ள வைரம் மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கடந்த 6ம் தேதி திருடுபோனது. இதுகுறித்து  அண்ணாநகர் காவல் நிலையத்தில் மகேஷ்வரன் புகார் கொடுத்தார். மேலும், தனது வீட்டில் வேலை செய்யும் சுகுணா மீது சந்தேகம் உள்ளது என்று தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், சுகுணாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதையறிந்த சுகுணா தலைமறைவாகிவிட்டார். இதனால், அவர்மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து, மகேஷ்வரன் வீட்டின் அருகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சுகுணா வீட்டிற்குள் சென்று வருவதும், அவர் கையில் ஒரு பையை கொண்டு செல்வதும் பதிவாகியிருந்தது. இதையடுத்து, சுகுணாவை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை அண்ணாநகர் காவல் நிலையத்தில் சுகுணா சரணடைந்தார். இதையடுத்து, போலீசார் அவரிடம் கிடுக்கிபிடி  விசாரணை நடத்தினர். அதில், ‘‘வேலை செய்த வீட்டில் திருடிய நகை, வைரம், பணம், வெள்ளி பொருட்களை தனது கள்ளக்காதலனிடம் கொடுத்து வைத்துள்ளேன்,’’ என்று தெரிவித்தார். இதையடுத்து, அவர் கொடுத்த தகவல்படி, சென்னை மணலி பகுதியை சேர்ந்த சுகுணாவின் கள்ளகாதலன் பாபு (39) என்பவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது, அவர், சுகுணா திருடிய நகைகள், பணம் மற்றும் வெள்ளி பொருட்களை தன்னிடம் கொடுத்ததையும், அவற்றை அண்ணா நகர், அத்திபட்டு மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள அடகு கடைகளில் அடமானம் வைத்து, அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர்களிடமிருந்து 8 சவரனை பறிமுதல் செய்த  போலீசார்,  தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Related Stories: