×

கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் சுவர் உதிரும் விவகாரம், கட்டுமான பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மூலம் சரி செய்யப்படும்; அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சென்னை: கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனை கட்டிடத்தை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி: கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 2016ம் ஆண்டு தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தை கட்ட ரூ.78 கோடி அரசு ஒதுக்கியது. 2019ம் ஆண்டு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 2020ல் பயன்பாட்டுக்கு வர இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் கொரோனா வார்டாக மாற்றப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததால் தற்போது மீண்டும் தேசிய முதியோர் நல மருத்துவ மையமாக மாற்றலாம் என்று நினைத்தபோது, இங்கு இருக்கும் சுவர் அனைத்தும் உதிர தொடங்கியது.

எனவே இந்த கட்டிடத்தை ஆய்வு செய்ய மனுசந்தானம் தலைமையில் மே மாதம் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஜூலை மாதம் ஆய்வு மேற்கொண்டு முழு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் கட்டிட உறுதி தன்மை நன்றாக உள்ளது. பூச்சு வேலை மட்டுமே சரியாக இல்லை என்று தெரிய வந்தது. எம்.சாண்டில் ரசாயனம் சரியாக கலந்து பூசி வேலை செய்யாததாலும், தண்ணீர் சரியாக ஊற்றாததாலும் தான் இதுபோன்று உதிர்கிறது எனவும் அறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த குழு 3 பரிந்துரைகளை முன்வைத்தது. 1. எம்.சாண்டில் ரசாயனம் கலந்து பூசி வேலையில் ஈடுபட வேண்டும்.  2. மருத்துவ மையத்தை ஒட்டி மழைநீர் வடிகால் சென்று கொண்டிருக்கிறது. அதை 2 அடி சற்று தள்ளி வைக்க வேண்டும். 3. பூசி வேலை முடிந்த பிறகு தண்ணீர் சரியாக ஊற்றி ஈரப்பதம் 200% இருக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை முன்வைத்தது.

இது தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு கடிதம் மூலம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்தால் சுவர் உதிர்வதை முழுமையாக சரி செய்து முடிப்போம். தற்போது தானாக முன் வந்து பணி தொடங்கிவிட்டனர். முழுக்க முழுக்க அவர்களின் விதையில் மட்டுமே மீண்டும் பணியை முடிக்க இருக்கிறார்கள். இதை கண்காணிக்க 2 உதவி பொறியாளர் நியமனம் செய்துள்ளோம். இரண்டு இடங்களில் மட்டுமே மணல் எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது. 38 மாவட்ட வருவாய்க்கு இரண்டு இடங்களில் இருந்து மணல் எடுப்பது என்பது நடக்காத காரியம் எனவேதான் எம்.சாண்ட் பயன்படுத்தப்படுகிறது. எம்.சாண்ட் பயன்படுத்தலாம் என அரசாணை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : King Institute ,Minister ,AV ,Velu , The issue of falling wall in the King Institute campus will be fixed by the contractor who undertook the construction work; Interview with Minister AV Velu
× RELATED திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை...