×

கதீட்ரல் சாலையில் உள்ள அரசு நிலத்தை சொந்தம் கொண்டாட தோட்டக்கலை சங்கத்திற்கு உரிமையில்லை; உயர் நீதிமன்றத்தில் காரசார வாதம்

சென்னை: சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள அரசு நிலத்திற்கு உரிமை கொண்டாட தோட்டக்கலை சங்கத்திற்கு உரிமை இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. சென்னை கதீட்ரல் சாலையில் சி.எஸ்.ஐ. டயோசிஸ் அலுவலகம் மற்றும் கதீட்ரல் தேவாலயம் உள்ளது. இதற்கு அருகேயும் எதிரேயும் உள்ள நிலத்தை தோட்டக்கலை சங்கம் நிர்வகித்து வந்தது. இந்த இடத்தை தமிழக அரசிடம் இருந்து இந்த சங்கம் நீண்டகால குத்தகைக்கு பெற்றிருந்தது. பின்னர் அந்த இடத்தை டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு தோட்டக்கலை சங்கம் உள்குத்தகைக்கு விட்டது. இதையடுத்து, திமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அந்த நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து அரசிடம் நிலம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிலம் பின்னர் செம்மொழி பூங்காவாக மாற்றப்பட்டது. இதற்கிடையே, செம்மொழிப் பூங்காவுக்கு எதிரேயுள்ள சுமார் 114 கிரவுண்ட் நிலத்தையும் அரசிடம் ஒப்படைக்கக் கோரி திமுக ஆட்சியில் தோட்டக் கலை சங்கத்தின் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு சென்னை மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிலம் யாருக்குச் சொந்தம் என்பதை உரிய ஆவணங்களைப் பரிசீலித்து கலெக்டரே முடிவை எடுக்கலாம் என்று உத்தரவிட்டது.
 
இந்நிலையில், அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து, அந்த இடம் தோட்டக்கலை சங்கத்துக்கே சொந்தமானது என்று கலெக்டர் பொறுப்பு வகித்த அப்போதையை மாவட்ட அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.  இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் புவனேஷ்குமார் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். மனுவில், மனுதாரருக்கு  சாதகமாக உத்தரவு பிறப்பிக்கும் வகையில் சென்னை மாவட்ட கலெக்டரை இடமாற்றம் செய்து கலெக்டர் பொறுப்பில் மாவட்ட வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தோட்டக்கலை சங்கத்துக்கே நிலம் சொந்தம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு சட்டவிரோதமானது என்று கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்த 2010ல் அப்போதைய தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாவட்ட வருவாய் அதிகாரி பிறப்பித்த உத்தரவை தடை செய்து 2011 நவம்பர் 1ம் தேதி நில நிர்வாக கமிஷனர் மற்றும் முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, நில நிர்வாக முதன்மைச் செயலாளரின் உத்தரவை எதிர்த்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறி புவனேஷ்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புவனேஷ்குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, மாவட்ட கலெக்டரின் பொறுப்பில் இருந்த மாவட்ட வருவாய் அதிகாரி நில உரிமை குறித்து முடிவு எடுக்க முடியாது. அதன் அடிப்படையில்தான் நில நிர்வாக முதன்மை செயலாளர் மாவட்ட வருவாய் அதிகாரியின் உத்தரவுக்கு தடை விதித்து மனுதாரருக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏற்கனவே அரசுக்கு சொந்தமான அந்த இடத்தை செம்மொழி பூங்காவாக அரசு மாற்றியுள்ளது. இந்த நிலையில் விளக்க நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. மனுதாரர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு அந்த நிலத்தை சொந்தம் கொண்டாட எந்த உரிமையும் இல்லை என்று வாதிட்டார். அப்போது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் வாதிட அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை ெசப்டம்பர் 7ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Tags : Horticultural Society ,Cathedral Road ,High Court , The Horticultural Society has no right to own the Government land on Cathedral Road; Argument in the High Court
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...