சட்டம் மட்டுமே உங்களை வழிநடத்த வேண்டும், சாதி, மத பாகுபாடு பணியில் குறுக்கிடக்கூடாது; பயிற்சி நிறைவு செய்த உதவி ஆய்வாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: சட்டம் மட்டுமே உங்களை வழிநடத்த வேண்டும், சாதி, மதம் போன்ற பாகுபாடுகள் உங்கள் பணியில் குறுக்கிடக்கூடாது என்று தமிழக காவல்துறையில் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி நிறைவு செய்த 927 உதவி ஆய்வாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழக காவல்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 927 உதவி ஆய்வாளர்கள் ஓராண்டு பயிற்சியை நேற்று நிறைவு செய்தனர். இதற்கான விழா நேற்று சென்னை வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தமிழக உள்துறை செயலாளர் பணீந்தர் ரெட்டி, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் இயக்குநர் அமல்ராஜ், ஐஜி ஜெயகவுரி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

ஓராண்டு பயிற்சியின்போது சிறப்பாக பயிற்சி பெற்ற உதவி ஆய்வாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பேசியதாவது: கடுமையான பயிற்சியை முடித்து களப்பணியாற்ற செல்லும் பயிற்சி உதவி ஆய்வாளர்கள் அனைவரும் ஒளிமயமான ஏற்றம் காண எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு காவல் பயிற்சியகமானது, பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்குக் களப்பணி மற்றும் ஆழ்ந்த தொழில்முறை தலைமைப்பண்பு, பகுத்தறிவும் புத்திக்கூர்மை, மென்கணினித் திறன் ஆகியவற்றைப் பயிற்சியின் மூலம் பதியவைப்பதில் வெற்றி பெற்றுள்ளது. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவது உங்களது முக்கியக் கடமை. குற்றம் நடக்காமல் தடுப்பதும் உங்களது கடமையாக இருக்க வேண்டும்.

எந்தக் குற்றவாளியும் தப்பிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதேநேரத்தில், அப்பாவி யாரும் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது. எப்போதும் பாதிக்கப்பட்டவர்க்கு நீதி கிடைக்க உங்களது பணியைப் பயன்படுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். சட்டம் மட்டுமே உங்களை வழிநடத்த வேண்டும். சாதி, மதம் போன்ற பாகுபாடுகள் உங்கள் பணியில் குறுக்கிடக் கூடாது. ஏழை - பணக்காரர் என்ற பேதம் பார்க்கக் கூடாது. உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்ற எண்ணம் கூடாது. பாதிக்கப்பட்டவர் - குற்றம் செய்தவர் என்பதே உங்களது அளவுகோலாக இருக்க வேண்டும். யாரையும் ஒரு பக்கச் சார்புடன் அணுகி, பிரச்னையைப் பார்க்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். நாடும், நாட்டு மக்களும் உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மக்களைப் பாதுகாத்து மாநிலத்தின் மாண்பைக் காப்பாற்றுங்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories: