×

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியர்களை விரட்டிய சீன ராணுவ வீரர்கள்

புதுடெல்லி: கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றவர்களை சீன ராணுவம் விரட்டி அடித்த சம்பவம் வெளியாகி உள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு மே 5-ம் தேதி சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீன தரப்பிலும் அதிக உயிர் பலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவமும் 16 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும், கிழக்கு லடாக் எல்லையில் முற்றிலும் அமைதி திரும்பவில்லை.

இந்நிலையில், கடந்த 21ம் தேதி கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் சிலர் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த சீன வீரர்கள், இது தங்கள் நாட்டு எல்லை எனக்கூறி அவர்களை விரட்டி உள்ளனர். இத்தகவல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா, சீனா இடையே அசல் எல்லைக்கோடு வரையறுக்கப்படாததால் இது போன்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கை என்று கூறப்படுகிறது.

அதே சமயம், இந்திய, சீன படைகளுக்கு இடையே எந்த மோதலும், நேருக்கு நேர் சந்திப்பு சம்பவங்களும் இல்லை என ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இந்த சம்பவம் குறித்து தனது டிவிட்டரில், ‘சீனா எங்கள் பிராந்திய இறையாண்மைக்கு சவால் விடுகையில், ஒன்றிய பாஜ அரசு அதை முற்றிலும் மறுக்கிறது’ என விமர்சித்துள்ளார்.


Tags : Indians ,eastern Ladakh border , Chinese soldiers chased Indians in eastern Ladakh border region
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...