கனடா தெருவுக்கு 2-வது முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் பெயர்

சென்னை: பிரபல இசை அமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றதன் மூலம் உலக அளவில் புகழ்பெற்றார். தென்னிந்திய மொழிகளை தொடர்ந்து பாலிவுட், அரபு மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்து வரும் அவர், தற்போது தமிழில் ‘மாமன்னன்’,‘கோப்ரா’,‘வெந்து தணிந்தது காடு’,‘பத்து தல’,‘அயலான்’,‘பொன்னியின் செல்வன்’,கதிர் இயக்கும் படம் மற்றும் இதர மொழியில் உருவாகும் சில படங்களுக்கு இசை அமைக்கிறார். தவிர, உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இந்நிலையில், கனடா நாட்டில் மார்கம் நகரிலுள்ள ஒரு தெருவுக்கு ‘அல்லா ரக்கா ரஹ்மான்’என்று ஏற்கனவே பெயர் சூட்டப்பட்டு இருந்தது. தற்போது அதே நகரில் புதிதாக உருவாகும் குடியிருப்பு பகுதியிலுள்ள ஒரு தெருவுக்கு ‘ஏ.ஆர்.ரஹ்மான்’என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார். மார்கம் நகர மேயர் பிராங்க் ஸ்கார்பிட்டி பெயர் பலகையை திறந்து வைத்தார். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் டிவிட்டரில் கூறியதாவது:

மார்கம் நகரம் மற்றும் கனடா மக்களிடம் இருந்து எனக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்துக்காக மிகவும் பெருமைப்படுகிறேன். இதை நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. மார்கம் நகர மேயர் பிராங்க் ஸ்கார்பிட்டி, இந்திய துணை தூதரக ஜெனரல் அபூர்வா வஸ்தவா மற்றும் கனடா மக்கள் அனைவருக்கும் நன்றி. ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயர் என்னுடையது அல்ல. இதற்கு இரக்கமுள்ளவர் என்று பொருள். இரக்கம் என்பது பொதுக்கடவுளின் குணம். அனைவரிடமும் அது இருக்கிறது. எந்தவொரு நபரும் இரக்கமுள்ளவரின் பணியாளனாக மட்டுமே இருக்க முடியும். ஆகவே, அந்தப் பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி, ஆரோக்கியத்தைக் கொண்டு வரட்டும்.

அனைத்து அன்புக்கும் இந்தியாவின் சகோதர, சகோதரிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து படைப்பாளிகளும் நான் உயர்வதற்காக உத்வேகம் அளித்தனர். அனைத்து பழம்பெரும் மனிதர்கள் உள்பட எல்லோரும் சினிமாவின் நூறாண்டைக் கொண்டாடவும், எழுச்சி பெறவும்

உத்வேகம் அளித்தனர். நான் கடலில் ஒரு மிகச்சிறிய துளி. மேலும் பல விஷயங்களைச் செய்வதற்கும், சோர்வு அடையாமல் மற்றும் ஓய்வுபெறாமல் இன்னும் பலவற்றைச் செய்வதற்கும், ஊக்கமளிப்பதற்கும் இது எனக்கு மகத்தான பொறுப்பைக் கொடுப்பதாக உணர்கிறேன். ஒருவேளை நான் சோர்வு அடைந்தாலும், இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டும், இன்னும் இணைத்துக்கொள்ள அதிகமான மக்கள் இருக்கின்றனர், இன்னும் அதிக தூரம் கடக்க வேண்டியிருக்கிறது என்பதை எனது நினைவில் கொள்வேன்.

Related Stories: