×

இடுக்கியில் பயங்கர நிலச்சரிவு; ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மண்ணில் புதைந்து இறந்தனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் இன்னும் குறையவில்லை. இடுக்கி, கண்ணூர், மலப்புரம், திருச்சூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு தொடங்கிய பலத்த மழை இடைவிடாது பல மணி நேரம் பெய்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் தொடுபுழா குடயத்தூர் பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த பகுதியில் வசித்து வந்த சோமன் (58) என்பவரது வீடு முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது.

அந்த வீட்டில் சோமன், அவரது மனைவி ஷிஜி, இவர்களது மகள் ஷீமா, அவரது மகன் ஆதிதேவ் (4), சோமனின் தாய் தங்கம்மா (75) ஆகியோர் வசித்தனர்.
இவர்கள் 5 பேரும் நேற்று காலை தூக்கத்திலேயே மண்ணுக்குள் புதைந்தனர். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த யாருக்கும் உடனடியாக விவரம் தெரியவில்லை. சிறிது நேரம் கழித்துத் தான் சோமனின் வீடு மண்ணுக்குள் புதைந்த விவரம் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அந்த பகுதியினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து தீயணைப்பு படை மற்றும் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்திலேயே மண்ணுக்குள் புதைந்திருந்த தங்கம்மாவின் உடலும் பின்னர் ஆதிதேவ், ஷீமா ஆகிய 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் மற்ற 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.

Tags : Idukki , Terrible landslide in Idukki; 5 members of the same family were killed
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு