ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான அறிக்கையின் பரிந்துரை அடிப்படையில் சசிகலா, விஜயபாஸ்கரிடம் விசாரணை: சட்ட வல்லுநர்கள் ஆலோசனைகளை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவு

*தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை

*ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம்

*முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சென்னை: ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அவரது தோழி சசிகலா, உறவினர் சிவகுமார், முன்னாள் அமைச்சர்  சி.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமை செயலாளர் ராம மோகன ராவ் ஆகியோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்ட  வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவத்தின்போது பணியில் இருந்த கலெக்டர், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 21 அதிகாரிகள் மீது உரிய  நடவடிக்கை எடுக்கவும் பின்னர் அதற்கான விபர அறிக்கையுடன் ஆணையத்தின்  அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை  கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இரு முக்கிய விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள்  முன்வைக்கப்பட்டன. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 2018 மே 22ம் தேதி  பேரணி நடத்திய மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், தூத்துக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிகழ்ந்த பிந்தைய நிகழ்வுகள் குறித்தும் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தால் கடந்த மே 18ம் தேதி அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கை குறித்து அமைச்சரவை விரிவாக விவாதித்தது.

இந்திய காவல் பணி அலுவலர்கள் உள்ளிட்ட 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 4 அலுவலர்கள் மீது தேவையான துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு அவை துறைகளின் பரிசீலனையில் உள்ளதை அமைச்சரவை கவனத்தில் கொண்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் உரிய தகுந்த நடவடிக்கை மேற்கொண்ட பின்னர், அதற்கான விபர அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைப்பதற்கு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா2016 செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் குறித்தும், அதைத் தொடர்ந்து 2016 டிசம்பர் 5ம் தேதி அவரது மரணம் வரையிலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தால் கடந்த 27ம் தேதியன்று அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையும் அமைச்சரவையின் முன்வைக்கப்பட்டது.

இவ்வறிக்கை குறித்து அமைச்சரவை விரிவாக விவாதித்தது. விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அமைச்சரவை பரிசீலித்து, அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சசிகலா, சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர், அதற்கான விபர அறிக்கையுடன், ஆணையத்தின் அறிக்கையை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சில இணையதள விளையாட்டுக்களால் ஏற்படும் சமுதாயக் கேடுகள் குறித்தும் அதுதொடர்பாக தடைச் சட்டம் கொண்டுவருதல் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இத்தகைய தடைச் சட்டங்கள் குறித்த  நீதிமன்றங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையிலும், பொதுமக்கள் மற்றும் வல்லுநர்களிடமிருந்து வரப்பெற்றுள்ள ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டும், இதுபோன்ற விளையாட்டுக்களை தடைசெய்வது குறித்த சட்ட வரைவினை வகுத்தல் குறித்தும், அதில் இடம்பெறவேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த வகை விளையாட்டுக்களை தடை செய்வதற்காக அவசர சட்டம் கொண்டுவரப்பட உள்ள விபரமும் அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: