×

ராசிபுரத்தில் கொட்டி தீர்த்த கனமழை; அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்தது

ராசிபுரம்: ராசிபுரத்தில் கொட்டி தீர்த்த கனமழையால், அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆனாகினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கி 4 மணி நேரத்திற்கும் மேல் பரவலாக கனமழை பெய்தது. இந்த கனமழையால் ராசிபுரம் நகரமே நீரில் மூழ்கியது. இதில் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள பெண்கள் சிகிச்சை பெற்று வரும் வார்டுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதியுற்றனர்.

பின்னர் நோயாளிகளை ஊழியர்கள் பத்திரமாக மாற்று அறைக்கு கொண்டு சென்றனர். மேலும், 15வது வார்டு பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் இரவு நேரங்களில் சிரமத் திற்கு உள்ளாகினர். கனமழையால் சாலைகளில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  

முழங்கால் அளவிற்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முழுவதும் நீர்சூழ்ந்தது. இதனால் இரவு நேரத்தில் பேருந்துகள் இல்லாததால் பயணிகள் இரவு முழுவதும் காத்துக் கொண்டிருந்தனர். தொடர் மழையின் காரணமாக காய்கறி கடைகளில் இருந்த காய்கறிகள் மற்றும் பல்வேறு பொருட்கள் நீரில் அடித்துச் செல்லப் பட்டது. ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள உழவர் சந்தையின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி மழைக்கு இடிந்து விழுந்தது.


Tags : Rasipuram , Heavy rains in Rasipuram; Floods entered the government hospital
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து