செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பரவலாக மழை; கல்பாக்கத்தில் கடல் சீற்றம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கல்பாக்கத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்துக்குட்பட்ட செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், தாம்பரம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், கூவத்தூர், கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம், புதுப்பட்டினம் ஆகிய இடங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இந்த மழையால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளானார்கள்.

அதே நேரத்தில் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக ஏரிகளான கொளவாய், பொன்விளைந்த களத்தூர், கொண்டங்கி, மானாம்பதி, கூடுவாஞ்சேரி, மதுராந்தகம், அணைக்கட்டு ஆகியவற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாய பயணிகள் ஜரூராக நடந்து வருகிறது. மழை காலம் நெருங்குவதால் மழைநீர் வரத்து கால்வாயை சீரமைக்க வேண்டும் என ஏரிநீர் பயன்படுத்துவோர் சங்கம், ஏரி பாசன விவசாயிகள் சங்கம், பாலாறு படுகை விவசாயிகள் சங்கம், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இன்று காலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் ஒரு சில இடங்களில் சாலையில் தண்ணீர் ஓடியது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளானார்கள். ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக தென்னேரி, உத்திரமேரூர் ஏரி, பல்லவன்குளம், பெரும்புதூர் ஏரி ஆகியவற்று நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாய பணிகள் ஜரூராக நடக்கிறது.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் ஒரு சில இடங்களில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடியது. திருவள்ளூர், திருநின்றவூர், ஆவடி, அம்பத்தூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் விவசாய பணிகள் களைகட்டியது. விவசாயிகள், அதிகாலையிலேயே விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். ஏரிகளுக்கான நீர்வரத்தும் உள்ளது.

Related Stories: