×

முக்கொம்பு மேலணைக்கு 1.10 லட்சம் கன அடி நீர் வரத்து; காவிரி, கொள்ளிடத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.! 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி: கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளும் நிரம்பி உள்ளதால், பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 1.35 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1.15 லட்சம் கனஅடியாக சரிந்துள்ளது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட பகுதிகளை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்து செல்கிறது. ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது.
இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து 1.20 லட்சம் கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலையும் நீர்வரத்து அதேஅளவில் நீடிக்கிறது.

அணை நிரம்பி இருப்பதால், அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் காரணமாக மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் வரத்து அதிகரித்துள்ளது.  இன்று காலை நிலவரப்படி மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது.  இதனால் மாயனூர் கதவணையிலிருந்து காவிரி ஆற்றிற்கு 1 லட்சத்து 29ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, புங்கோடை வழியாக தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் வழியே சென்று கொண்டிருக்கிறது. இங்கிருந்து காவிரி ஆற்றில் வெள்ள நீர் இரு கரைகளையும் தொட்டபடி திருச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

மாயனூர் கதவணையிலிருந்து முக்கொம்பு மேலணைக்கு நேற்று மாலை 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில் இன்று காலை கூடுதலாக 1லட்சத்து 10ஆயிரத்து 346 கன அடி தண்ணீர் வந்தது.  இதையடுத்து முக்கொம்பில் இருந்து காவிரியில் இன்று காலை 27,485 கன அடி, கொள்ளிடம் ஆற்றில் 82,431 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.  இதனால், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்க தொடங்கியுள்ளது.  இதேபோல் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கால் தஞ்சை காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இந்நிலையில், சேலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் காவிரி கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Mukkombu ,Kollid , 1.10 lakh cubic feet of water inflow to Mukkombu; Cauvery floods again in Kollid. Flood warning for people of 12 districts
× RELATED கொள்ளிடம் கரையோரம் தைல மரத்தோப்பில் தீ