×

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய பாஜ பிரமுகர் கனல் கண்ணன் ஜாமீன் மனு.! போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணம் நிறைவு விழாவையொட்டி, சென்னை மதுரவாயலில் கடந்த 1ம் தேதி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ரங்கம் ரங்கநாதர் கோயில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என 3 முறை கடும் ஆக்ரோஷமாக பேசி  இருந்தார். இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரன், சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரில், ‘இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல்கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

அதன்பேரில், கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் கடந்த 11ம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து, புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணன் கடந்த 15ம் தேதி கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, கனல் கண்ணன் ஜாமீன் கோரிய மனுக்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றம் மற்றும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு மீது போலீஸ் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 1ம் தேதி தள்ளி வைத்துள்ளார்.

Tags : BJP ,Kanal Kannan ,Periyar , BJP leader Kanal Kannan, who said that Periyar's statue should be broken, is seeking bail. Court orders police to respond
× RELATED மதுரை நேதாஜி சாலையில் உள்துறை...