×

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை இழுக்க ரூ.100 கோடியில் அதிரடி திட்டம்: ஓபிஎஸ் - சசிகலா ரகசிய ஒப்பந்தம்


சென்னை: அதிமுகவை கைப்பற்றும் வகையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை இழுக்க ஓபிஎஸ், சசிகலா இணைந்து ரூ.100 கோடியில் அதிரடி திட்டம் வகுத்துள்ளனர். இதற்காக, இருவரும் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பல எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ் பக்கம் தாவ தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, எடப்பாடி ஆதரவாளர்களிடையே கலக்கத்தையும், அதிமுகவில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்தது. ‘ஒற்றைத் தலைமையின் கீழ் கட்சி செயல்படாததால் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஒற்றைத் தலைமை நீடித்தால் தான் கட்சியை வலுப்படுத்த முடியும்’ என்று எடப்பாடி தரப்பு கருதியது. இதை தொடர்ந்து கட்சியை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார். அதாவது, பொது செயலாளர் என்ற பதவியை மீண்டும் உருவாக்கி அதில் தான் அமரலாம் என்று நினைத்தார். இதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்தார். ‘இரட்டை தலைமையில் கட்சி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் போது இப்போதைக்கு ஒற்றைத் தலைமை தேவையில்லை’ என்று ஓபிஎஸ் கூறி வந்தார். இதனால் எடப்பாடி, ஓபிஎஸ் இடையே மோதல் உருவானது.

இதை தொடர்ந்து தனக்குள்ள பலத்தை நிரூபித்து கட்சியை கைப்பற்ற எடப்பாடி திட்டமிட்டார். இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்க எடப்பாடி தயாராக இருந்தார். பல சுவீட் பாக்ஸ்களை செலவு செய்து மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்களை இழுத்தார். ஓபிஎஸ் பக்கம் இருந்த மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்களை இழுக்க கூடுதல் சுவீட் பாக்ஸ்கள் வழங்கப்பட்டன. இதனால், பலர் எடப்பாடி பக்கம் தாவினர். 90 சதவீதம் நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் ஓபிஎஸ் பணம் செலவு செய்யாததால் கட்சியினரை தன்பக்கம் இழுக்க முடியவில்லை. ஓபிஎஸ்சுக்கு வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தனது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் மற்றும் ஒரு சில மாவட்ட செயலாளர்களின் ஆதரவு மட்டுமே இருந்தது.இந்த நிலையில் எடப்பாடி தரப்பு பொதுக்குழுவை கூட்டி அதில் இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதே நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் நடத்தப்பட்ட இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘அதிமுக பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் நடத்தியது செல்லாது. எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்தது ரத்து செய்யப்படுகிறது. ஓபிஎஸ்சை அதிமுகவில் இருந்து நீக்கியதற்கும் தடை விதித்து பரபரப்பு தீர்ப்பை அளித்தது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்து மீண்டும் பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் மூலம் கட்சியை கைப்பற்றி விடலாம் என்ற எடப்பாடி பழனிசாமிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த வெற்றியை அடுத்து மீண்டும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று எடப்பாடிக்கு ஓபிஎஸ் பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். அதிமுகவிற்கு மீண்டும் வருமாறு சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கும் ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்தார். இணைந்து பணியாற்றி கட்சியை வலுப்படுத்துவோம் என்றும் ஓபிஎஸ் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி, ஓபிஎஸ்சுடன் ஒருபோதும் இணைந்து பணியாற்ற முடியாது என்று அறிவித்தார். மேலும் ஓபிஎஸ்சுக்கு பதவி இல்லாமல் இருக்க முடியாது. உழைப்பும் கிடையாது. அதிமுகவில் உயர் பொறுப்பில் இருப்பவர் அநாகரிகமாக நடந்து கொண்டால் எப்படி இணைந்து பணியாற்ற முடியும் என்று ஓபிஎஸ் குறித்து எடப்பாடி பகிரங்கமாக குற்றம் சாட்டி பேட்டியளித்தார்.

ஓபிஎஸ்சுக்கு எதிராக ஒரு கை பார்த்து விடலாம் என்ற நோக்கில், ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ளது.இந்த நிலையில் தனக்கு கிடைத்த வெற்றியை சாதமாக்கி கொண்டு அதிமுகவை கைப்பற்றும் முடிவில் ஓபிஎஸ் இறங்கியுள்ளார். இதற்கு டெல்லியில் உள்ள பாஜ தலைமையும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கட்சியை கைப்பற்ற சசிகலாவுடன் ஓபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்களை இழுக்க மெகா பிளான் தீட்டப்பட்டது. இதற்காக சசிகலா ரூ.100 கோடி பிளானை போட்டு ஓபிஎஸ்சிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. டி.டி.வி.தினகரன் பணம் கேட்ட போது கொடுக்காத சசிகலா, ஓபிஎஸ் கேட்டவுடன் பணத்தை வாரி வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அந்த முதல்கட்ட ஆபரேஷனில் தென்மாவட்ட நிர்வாகிகள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தினரை தங்கள் பக்கம் இழுப்பதற்காக நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. எடப்பாடி ஆதரவாளர்களை இழுக்கும் முயற்சியில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ரவீந்திரநாத் ஆகியோரை ஓபிஎஸ் நேரடியாக களம் இறக்கியுள்ளார். இவர்கள் எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான், எடப்பாடி ஆதரவாளரான உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், ஓபிஎஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. திடீரென தங்கள் பக்கம் இருந்த எம்எல்ஏ ஒருவர் ஓபிஎஸ் அணிக்கு தாவியது எடப்பாடிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடனும் பேச்சுவார்த்தையில் சசிகலா, ஓபிஎஸ் தரப்பினர் இறங்கினர். அவரும் ஓபிஎஸ் பக்கம் வர கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல பல எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ், சசிகலாவிடம் பேச்சுவார்த்தையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், எந்த நேரத்திலும் பல மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் தாவுவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ், சசிகலா அதிரடி பிளானால் எடப்பாடி அணியினர் அதிர்ந்து போய் உள்ளனர். இதை நிரூபிக்கும் வகையில் எம்எல்ஏ ஐயப்பன் தங்கள் பக்கம் இணைந்த போது ஓபிஎஸ் அளித்த பேட்டியில், ‘‘மேலும் பல எம்எல்ஏக்கள் எங்கள் அணிக்கு வருவார்கள். அது பரம ரகசியம்” என்று கூறியிருந்தார். அந்த பரம ரகசியம் தற்போது போட்டுள்ள மெகா பிளான் என்பது உறுதியாகியுள்ளது.அதே நேரத்தில் மாவட்ட வாரியாக ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரிந்து சென்ற நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஓபிஎஸ்சுக்கு எதிராக பேசி வந்த பல முன்னாள் அமைச்சர்கள் தற்போது மவுனம் காக்க தொடங்கியுள்ளனர். ஒருவேளை ஓபிஎஸ் கை ஓங்கினால் நம்முடைய பாடு சிக்கல் ஆகிவிடும் என்று கருதி பிரச்னை வேண்டாம் என்று இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Tags : Edapadi Palanisamy ,OPS ,Sasigala , Edappadi Palaniswami Supporter, Rs.100 Crore Action Plan, OPS - Sasikala, Secret Deal
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி