வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா?: ஆய்வு செய்ய ஊழியர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும் என ஊழியர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இறப்பது அதிகரித்து வருகிறது. இதற்கு சட்டவிரோதமாக அமைக்கப்படும் மின்சார வேலிகளும் முக்கியமான காரணமாக இருக்கிறது. அவ்வப்போது அதிகாரிகள் நடத்தும் சோதனையின் மூலம் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவ்வாறு மின்சார வேலிகளில் சிக்கி வனவிலங்குகள் இறப்பதை தடுக்க மின்சார வாரியம் தீவிர நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும் என ஊழியர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து தமிழக மின்சார வாரியம் அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘மின்வேலிகளில் இருந்து வெளியேறும் மின்சாரம் பாய்ந்து வன விலங்குகள் இறப்பதை தடுக்கும் வகையில் தமிழக அரசு சில வழிகாட்டுதல்களை ஏற்கனவே வழங்கியுள்ளது. அதன்படி மின்வாரிய ஊழியர் அப்பகுதி வனத்துறை அதிகாரியுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வன விலங்குகள் அடிக்கடி கடக்கும் பகுதிகளை அடையாளம் காண ஒலிபரப்பு கம்பிகளை நிறுவி பராமரிக்க வேண்டும்.

வன பகுதிகளில் ஏதேனும் நேரடி மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க ஊழியர்களை நியமிக்க வேண்டும். வனப்பகுதிகளுக்கு அருகில் நேரடி மின்சார வேலிகள் இருந்தால் உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும். கிராமங்களில் உள்ள பிரிவு அலுவலகங்கள்/ செய்தித்தாள், ஊடகம், தண்டோரா ஆகியவற்றின் மூலமாக விளம்பரம் செய்வது, பிட் நோட்டீஸ் வழங்குவதன் மூலம் இவ்வாறு மின்சார வேலிகள் அமைப்பது கிரிமினல் குற்றம் என்பதை தெரியப்படுத்த வேண்டும். அப்போது மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட்டும். இது ரூ.10,000 வரை நீட்டிக்கப்படலாம் அல்லது சிறைதண்டனையுடன் அபராதமும் விதிகப்படும் நிலை மின்சாரச் சட்டம் 138வது பிரிவின்படி இருக்கலாம் என்பதை தெரியப்படுத்த வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: