×

ராஜிவ்காந்தி சாலையில் பாரம்பரிய விளையாட்டுகளுடன் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்; மாணவ, மாணவிகள் சாகசம்

துரைப்பாக்கம்: வாகனம் அல்லாத போக்குவரத்தை மேம்படுத்துவதற்காகவும், உடற்பயிற்சி மற்றும் மகிழ்ச்சியான  மனநிலையின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும் சென்னையில் நெருக்கடி நிறைந்த சாலைகளில் ‘‘ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்’’எனும்  நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர போக்குவரத்து காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் அண்ணாநகர், ராஜிவ்காந்தி சாலை, அடையாறு காந்தி நகர் 4வது பிரதான சாலை, நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் சாலை, மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலை, கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலை, கே.கே.நகர் லட்சுமணன் சாமி சாலை, மெரினா காமராஜர் சாலை ஆகிய 8 இடங்களில் இநத் ‘‘ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்’’நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான சாலையில் 5 வாரங்களுக்கு நடைபெறும், என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சாலைகளில் 3 மணி நேரத்திற்கு முழுவதுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதன்படி, சென்னை ராஜிவ் காந்தி சாலையில் துரைப்பாக்கம் சிக்னல் முதல் பெருங்குடி கார்ப்பரேஷன் சாலை சந்திப்பு வரை நேற்று காலை ‘‘ேஹப்பி ஸ்ட்ரீட்ஸ்’’நிகழ்ச்சி நடந்தது. இதில், கிராமிய நடனம், இசை நிகழ்ச்சிகள், இலவச சைக்கிள் பயணம், ஸ்கேட்டிங், கயிறு இழுத்தல், கைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட், சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற சாகசம் மற்றும்  நடன நிகழ்ச்சி,   கிரிக்கெட், பூப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியை காண துரைப்பாக்கம், பெருங்குடி, பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சி காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து மாற்றும் செய்யப்பட்டது. அதாவது அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் பெருங்குடி கார்ப்பரேஷன் சாலை சந்திப்பு முதல் சிக்னல் துரைப்பாக்கம் சிக்னல் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் பெருங்குடி கார்ப்பரேஷன் சாலை வழியாக துரைப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு, சென்றடைந்தன. பின்னர், துரைப்பாக்கம் 200 சாலை சென்று ராஜிவ் காந்தி சாலை செல்ல வழிவகை செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை துரைப்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போக்குவரத்து போலீசார் செய்திருந்தனர்.

Tags : Rajiv Gandhi Road , Happy Streets lined with traditional games along Rajiv Gandhi Road; Students adventure
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்