×

கடலூர் மத்திய சிறை அருகே பரபரப்பு உதவி ஜெயிலர் குடும்பத்தை உயிருடன் எரித்து கொல்ல முயற்சி: பிரபல சென்னை ரவுடி கூலிப்படை ஏவினாரா?

கடலூர்: கடலூர் மத்திய சிறை அருகே உள்ள உதவி ஜெயிலர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, அவரது குடும்பத்தினரை உயிருடன் எரித்து கொல்ல முயற்சி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலூர் மத்திய சிறையில்  கடந்த 8ம் தேதி உதவி ஜெயிலர் மணிகண்டன் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னை எண்ணூரை சேர்ந்த கைதி தனசேகர் என்பவர் அறையிலிருந்து ஒரு செல்போன், ஒரு சார்ஜர் மற்றும் 2 பேட்டரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது தனசேகருக்கும், உதவி சிறை அலுவலர் மணிகண்டனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மணிகண்டன் இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தனசேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது மணிகண்டன் மருத்துவ விடுப்பில் உள்ளார். மேலும் அவர் சொந்த வேலை காரணமாக தஞ்சாவூர் சென்றிருந்தார். அவரது வீட்டில் மணிகண்டனின் தாயார் சாவித்திரி, தந்தை ராமலிங்கம், மனைவி பவ்யா மற்றும் 2 மகன்கள் இருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை உதவி ஜெயிலர் மணிகண்டன் குடியிருக்கும் காவலர் குடியிருப்புக்கு வந்த மர்ம நபர்கள் சிலர், அவர் வீட்டின் சமையல் அறையின் ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

இதில் அந்த அறை முழுவதும் பற்றி எரிந்தது. இந்த நேரத்தில் உதவி சிறை அலுவலர் மணிகண்டனின் குடும்பத்தினர் வேறு ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்ததால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்நிலையில் வீட்டில் புகை நாற்றம் அடித்ததால் விழித்துக் கொண்ட மணிகண்டனின் குடும்பத்தினர் அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, சமையலறையில் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது.  இதையடுத்து அவர்கள் விரைந்து செயல்பட்டு தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில் சமையல் அறையில் இருந்த கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர்  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கடந்த 8ம் தேதி எண்ணூர் கைதி தனசேகரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்த போது, மணிகண்டனுக்கும் தனசேகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதை மனதில் வைத்துக்கொண்டு தனசேகர் கூலிப்படையை ஏவி உதவி சிறை அலுவலர் மணிகண்டன் குடும்பத்தினரை உயிருடன் எரித்து கொலை செய்ய முயற்சி நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் உள்ள தனசேகர், மிகப்பெரிய ரவுடி என்று கூறப்படுகிறது. அவர் மீது கொலை வழக்குகள் உள்பட 18 வழக்குகள் உள்ளது. இவர் கடந்த 6 மாதமாக கடலூர் மத்திய சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Cuddalore Central Jail ,Chennai , A riot near the Cuddalore Central Jail tried to burn the family of an assistant jailer alive: Did the famous Chennai rowdy mercenary escape?
× RELATED ‘மலையாள நாடகத்தை ஒளிபரப்பு..’ கைதி...