×

பாதாள சாக்கடை பணி நிறைவு பெற்றதால் மணலி பாடசாலை தெருவில் சாலை அமைக்க வேண்டும்; பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவொற்றியூர்: மணலி பேருந்து நிலையத்திலிருந்து கோயம்பேடு, உயர் நீதிமன்றம், தங்க சாலை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் அனைத்தும் மணலி பாடசாலை வழியாக காமராஜர் சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் பாடசாலை தெருவில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்றன.
இதனால், இந்த பாடசாலை தெருவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுமையாக முடியும் வரை மணலி பேருந்து நிலையம் மூடப்பட்டு, தற்காலிகமாக மணலி மண்டலம் அலுவலகம் எதிரே காமராஜ் சாலையை ஒட்டி தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், கடந்த இரு மாதங்களாக சி.பி.சி.நகர், சின்ன மாத்தூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து வந்து இந்த தற்காலிக பஸ் நிலையம் வந்து, பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து வருகின்றனர்.

இதனால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதோடு கல்லூரி, பள்ளி மாணவர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் போன்றவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது பாடசாலை தெருவில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து விட்டது. ஆனாலும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் மீண்டும் சாலை போடாமல் ஆங்காங்கே குண்டும், குழியுமாக இருப்பதால் இந்த பாடசாலை தெருவில் மாநகர பேருந்து இயக்குவது தொடங்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மணலியில் இருந்து முதியவர்கள், கர்ப்பிணிகள் பலர் அதிகளவில் பேருந்தில் பயணிக்கின்றனர். தற்போது இந்த பேருந்துகள் காமராஜ் சாலையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இவர்கள் சிரமப்படுகின்றனர். அது மட்டுமின்றி தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. மழை பெய்தால் முழுமையாக நனைய வேண்டிய நிலை உள்ளது. மேலும் பாம்புகள் நடமாட்டம் உள்ளதால் பீதியுடனே பேருந்துக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே பாதாள சாக்கடை பணி முடிந்த பாடசாலை தெருவில் சாலை அமைத்து மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை இயக்க மாநகர பேருந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’என்றனர்.

Tags : Manali School Street , As the underground sewer work is completed, a road should be constructed on Manali School Street; Public insistence
× RELATED பாதாள சாக்கடை பணி நிறைவு பெற்றதால்...