சென்னை: மயிலாப்பூர் வடக்கு மாட வீதியை சேர்ந்தவர் தியாகராஜன் (55). இவர் அதே பகுதியில் உலோக சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் கடந்த 10 ஆண்டுகளாக ராணிபேட்டையை சேர்ந்த சண்முகம் (56) என்பவர் வேலை செய்து வந்தார். இதற்கிடையே கடையில் விற்பனை செய்ய வைத்திருந்த 6 வெண்கல சிலைகள் திடீரென மாயமானது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் தியாகராஜன், ஊழியர் சண்முகத்திடம் கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.
இதையடுத்து, சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது கடையில் இருந்து 6 வெண்கல சிலைகளை ஊழியர் சண்முகம் எடுத்து சென்றது தெரியவந்தது. உடனே சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் தியாகராஜன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து, கடை ஊழியர் சண்முகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருடப்பட்ட 6 சிலைகளும் மீட்கப்பட்டது.