×

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொள்ள உள்ள நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 7ம் தேதி தொடங்கி வைக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று அளித்த பேட்டி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை வருகிற 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்குகிறார்.

கன்னியாகுமரி காந்தி நினைவிடத்தில் வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் தேசிய கொடியை வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். அன்றைய தினம் கன்னியாகுமரியில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. தமிழகத்தில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நாளும் 2 கூட்டணி கட்சித் தலைவர்கள் ராகுல்காந்தியோடு 10 நிமிடம் நடைபயணம் மேற்கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்க உள்ளனர்.

ராகுல்காந்தி தமிழகத்தில் இருக்கும் 4 நாட்களிலும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் நடைபயணத்தில் பங்கேற்று ராகுலுக்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள்.
இந்திய மக்களை பிரித்தாள நினைக்கும் ஆர்எஸ்எஸ்சின் சனாதன சித்தாந்தத்தால் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசன சட்டத்திற்கும், அதில், முதன்முதலில் காமராஜரால் இடஒதுக்கீட்டுக்காக திருத்தம் கொண்டு வரப்பட்டு உருவாக்கப்பட்ட சமூகநீதிக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது. இதனை ராகுல்காந்தி மக்களிடம் எடுத்துரைக்க இருப்பதே இந்த நடைபயணத்தின் முக்கிய நோக்கம்.

மேலும், தவறான பொருளாதார கொள்கை, விவசாய கொள்கை, தாறுமாறான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படவில்லை, கருப்புப் பணத்தை மீட்டு அனைத்து குடிமக்களுக்கும் தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இவற்றையெல்லாம் மக்களிடம் எடுத்து கூறி இளைஞர்களை, பெண்களை திரட்ட, சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே ராகுல்காந்தி இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார். கண் பார்வையற்றோரும் ராகுல்காந்தியுடன் சிறிது தூரம் நடக்க இருக்கிறார்கள். மூத்த தலைவர் குமரி அனந்தன் ஒரு கதர் ஆடையை முதன் முதலாக ராகுல் காந்திக்கு செப்டம்பர் 8ம் தேதி அணிவித்து இந்த நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.


Tags : MK Stalin ,Rahul Gandhi ,Kanyakumari ,Kashmir ,KS ,Alagiri , MK Stalin Inaugurates Rahul Gandhi's Kanyakumari to Kashmir Walk: KS Azhagiri Interview
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...