ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் 25 ஆயிரம் பேர் பங்கேற்பு: பொதுச் செயலாளர் தகவல்

சென்னை: ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னையில் நடைபெறும் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் 25 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித் துள்ளார்.தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வடக்கு மண்டல மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ் தலைமைதாங்கினார். பின்னர் அவர்  அளித்த பேட்டி:வரும் செப்டம்பர் 10ம் தேதி சென்னை தீவுத்திடலில் நடக்க இருக்கின்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பின் வாழ்வாதார  நம்பிக்கை மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். அதனால் கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள தமிழகத்தின் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்  வர இருக்கின்றனர்.

தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டுக்கு முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கான சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக எங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பங்களிப்பு ஓய்வு ஊதிய  திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமுல்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைவதுடன், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவது, தொடக்க கல்வித்துறை முழு சுதந்திரமாக இயங்க அரசாணை 101, 108 ஆகியவற்றை ரத்து செய்தல், தேசிய மருத்துவ காப்பீட்டில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ செலவினங்களை  முழுவதுமாக காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க நடவடிக்கை எடுத்தல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் உள்ள பணிப்பாதுகாப்பு போல ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யும் சட்டம் கொண்டு வருதல் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். அவற்றை பரிசீலித்து அவர் அறிவிப்புகள் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: